
காடுகளில் பழுத்துக் குலுங்கிக் கிடக்கும் சில வகைப் பழங்களை விலங்குகள் ரசித்து ருசித்து உட்கொண்டு மகிழும். ஆனால், அதே பழங்களை மனிதர்கள் உட்கொள்ளும்போது, அவை அவர்களுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணவும் சில நேரம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சில வகைப் பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஒய்ல்ட் செரீஸ் (Wild Cherries): ஒய்ல்ட் செர்ரி பழத்தின் விதைகளில் சயனைட் என்னும் விஷம் உள்ளது. இது மனிதர்கள் உண்ண ஏற்றதல்ல. ஆனால், பறவைகளும் விலங்குகளும் இப்பழத்தின் சதைப் பகுதியை எந்தப் பிரச்னையுமின்றி உட்கொள்கின்றன.
2. எல்டெர் பெர்ரிஸ் (Elder berries): பச்சை (raw) எல்டெர் பெர்ரிஸ் மற்றும் அதன் இலைகள் விஷத்தன்மை கொண்டு, மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆனால், பறவைகள் இந்தப் பழங்களினால் எந்தவிதப் பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இவற்றைத் தின்று வருகின்றன.
3. ஏவ் பெர்ரிஸ் (Yew Berries): இந்தப் பழத்தின் சிவந்த உட்புற சதைப்பகுதி மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் இழைக்காது. ஆனால், அதன் விதைகள் மனிதர்களை மரணிக்கச் செய்யும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது. இதே விதைகளை பறவைகள் உட்கொள்ளும்போது அவை சுலபமாக அவற்றுக்கு ஜீரணமடைந்து விடுகின்றன.
4. ரோவன் பெர்ரிஸ் (Rowan Berries): பச்சை (raw) ரோவன் பெர்ரிஸ் மனிதர்களின் இரைப்பை, குடல் போன்ற ஜீரண மண்டல உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. குருவிகள் இந்தப் பழங்களை உண்ணும்போது அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
5. ஒசேஜ் ஆரஞ்சு (Osage Orange): இந்தப் பழத்தின் கசப்பு சுவையினால் மனிதர்கள் இதை உண்பதைத் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், அணில் மற்றும் மான் போன்ற விலங்குகள் இதை சாதாரணமாக உட்கொண்டு வருகின்றன.
6. லாண்டனா பெர்ரிஸ் (Lantana Berries): பச்சையாக உள்ள இந்த வகை பெரி விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை. ஆனால், பறவைகள் இப்பழத்தை உட்கொண்டு, பின் அதன் விதைகளை வேறு பல இடங்களிலும் பரவச் செய்கின்றன.
7. Pawpaw (Asimina triloba): இதை குறைந்த அளவில் உண்ணும்போது மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதிகமாக உட்கொண்டால் குமட்டல் வரும் வாய்ப்புள்ளது. ரக்கூன் மற்றும் அணில் போன்ற விலங்குகள் இந்த கஸ்டர்ட் ஆப்பிளை விரும்பி உண்கின்றன.
8. சோர்சப் (Soursop): இதன் விதைகளை நசுக்கினால் நச்சுத்தன்மை உள்ளதாகிறது. ஆகையால், மனிதர்கள் இதை உண்பதில்லை. குரங்குகள் மற்றும் பல வன விலங்குகள் இதை எந்தவித பாதிப்புமின்றி உட்கொண்டு வாழ்கின்றன.