வானிலையை நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர் போல கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் எல் நினோ. திடீரென நாம் கணிக்க முடியாத இயற்கை மாற்றத்தைத்தான் இப்படி சொல்வார்கள். இந்த இயற்கை நிகழ்வுக்கு உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த வானிலையும் பாதிக்கும் சக்தி உள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில், 'The Boy' என அர்த்தம். இது பசிபிக் பெருங்கடலில் திடீரென வெப்பநிலை உயர்வதால் அதற்குக் கொடுக்கப்பட்ட பெயராகும். இதனால் அங்குள்ள காற்று கடலின் மேற்பகுதியில் இருந்து வெதுவெதுப்பான நீரை கிழக்கு நோக்கி அனுப்புகிறது. இதனால் உந்தப்படும் மேகங்கள் கிழக்கில் குளிர்ச்சியாகவும் மேற்கில் வெப்பமாகவும் இருக்கும். எனவே, இதனால் உலகெங்கிலும் வெப்ப நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். திடீரென ஒரு பகுதியில் அதிகப்படியான வெயில் காயும், நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென அதீத மழை கொட்டித் தீர்க்கும்.
இந்த எல் நினோவால் வறண்ட இடங்களுக்கு திடீரென பலத்த மழையைக் கொண்டு வர முடியும். இதனால் அதிகமான சூறாவளி மற்றும் புயல்கள் உண்டாகலாம். சில சமயங்களில் ஏற்கெனவே உருவாகி இருக்கும் புயல்களை இது பலப்படுத்துகிறது. உலகின் பல பகுதிகள் இதனால் வெப்பமாகவும், குளிர்ச்சியாகவும் மாறும்.
எல் நினோ ஏன் முக்கியமானது?
விஞ்ஞானிகள் எல் நினோவைப் பற்றி புரிந்துகொள்வது வானிலையை கணிக்க பெரிதும் உதவுகிறது. இது எப்போது வரும்? என்ன செய்யும் என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் எல் நினோவை தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். இதனால் வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற தீவிர வானிலை பாதிப்புகள் குறித்து மக்களை எச்சரிக்க முடியும். இது ஒரு வானிலை நிகழ்வு என்பதைத் தாண்டி நமது வாழ்க்கையை எந்தெந்த வகையில் பாதிக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பயிர்கள், நீர் ஆதாரங்கள் மற்றும் கடல் மீன்கள் கூட பாதிக்கப்படலாம்.
எல் நினோ பூமியில் நடக்கும் ஒரு ஆச்சரியமான நிகழ்வு. இது வழக்கமான வானிலை முறைகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடுகிறது. என்னதான் விஞ்ஞானிகள் தற்போது பல தொழில்நுட்பங்களால் கால நிலைகளைத் துல்லியமாக கணித்தாலும், இயற்கை என்றுமே ஒரு படி மேல் என்பதை நினைவூட்டும் வகையிலேயே எல் நினோ செயல்படுகிறது. மேலும், இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதன் மூலமாக மாறிவரும் உலகை நம்மால் பாதுகாக்க முடியும்.