
தென் அமெரிக்காவில் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆகிய நன்னீர் ஆற்றுப் படுகைகளில் மின் விலாங்கு மீன்கள் (Electrophorus electricus) வாழ்கின்றன. மேலும் சதுப்பு நிலம், சிற்றோடைகள், சிற்றாறுகள் மற்றும் கடலோர சமவெளி ஆகிய பகுதிகளிலும் இம்மீன்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேற்றின் அடிப்பகுதியில் உள்ள கலக்கமற்ற அல்லது தேங்கிய நீரில் வாழ்கின்றன. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோ கிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களைப் பொதுவாகக் காணலாம்.
இம்மீன்கள், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யக் கூடியவை. மின்னழுத்தம் அதிக அளவாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். எனவே, இதனை மின்னாற்றல் மீன் என்கின்றனர். இது தன் இரை மீது மின்சாரம் பாய்ச்சி அதை அதிர வைக்கும் தன்மை கொண்டிருப்பதால் மின்சார விலாங்கு என்று பெயர் பெற்றது.
ஒரு மின்சார விலாங்கின் (Electric eel) வயிற்றுப் பகுதியை, முதனுறுப்பு, அண்டருறுப்பு, சாக்குறுப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம். இம்மூன்று உறுப்புகள் விலாங்கினுள் மின்னுற்பத்திக்கு காரணமாகின்றன. மின்பகு பொருட்களால் ஆன இம்மூன்று உறுப்புகளுள் தேவைப்படும் போது அயனிகள் அடுத்தடுத்து அடுக்கப் பெற்று, மின்னழுத்த வேறுபாடு உருவாகின்றது. இந்த வேறுபாட்டினால் உயர் மின்னழுத்தம் மற்றும் குறை மின்னழுத்தம் ஒரு விலாங்கின் உடலில் சாத்தியமாகிறது.
இம்மீன்கள் முதுகெலும்பற்ற உயிரிகளை உண்டு வாழ்பவையாக இருக்கின்றன. இருப்பினும், இம்மீன்களில் வயது முதிர்ந்த விலாங்குகள், சிறு மீன்கள் மற்றும் எலி போன்ற பாலூட்டிகளையும் உண்கின்றன. இளம் மின் விலாங்குகள் முதுகெலும்பற்ற இறால் மற்றும் நண்டுகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.
இம்மீன்கள் வினோதமான இனப்பருக்க முறையைக் கொண்டுள்ளன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக் கொண்டு ஒரு கூடு கட்டுகிறது.
அந்த உமிழ்நீர்க் கூட்டில் பெண் மீன் முட்டையிடுகிறது. ஒரு கூட்டில் அதிகபட்சமாக, 3000 மீன் குஞ்சுகள் வரை பொரிகின்றன. பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியதாக வளர்கின்றன.
மின்சார விலாங்குகள் தனித்திருப்பவை என்று பல காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், அண்மைய ஆய்வறிக்கையின் படி, அவைகள் கூட்டமாக வேட்டையாடுவது கண்டறியப்பட்டிருக்கிறது.
யேல் பல்கலைக்கழக மற்றும் அமெரிக்கத் தொழில்நுட்ப தரவரிசைக் கல்வியக ஆய்வறிஞர்கள் மின்னுற்பத்தி செய்யும் மின்சார விலாங்குகளின் உயிரணுக்களை செயற்கை முறையில் நகலெடுப்பதன் மூலம், மனித உடலுக்குள் பொருத்தப்படும் நுண் மருத்துவக் கருவிகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமா? என்று ஆராய்ந்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.