ஆண்டு தோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்கான அடித்தளம் 1972ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஸ்டாக்ஹோம் நகரில் ஜூன் 5 முதல் 16 வரையில் நடத்தப்பெற்ற உலக சுற்றுச்சூழல் மகாநாட்டில் போடப்படடது. சுற்றுசூழல் சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கையை ஊக்குவிப்பது இந்த தினத்தை கொண்டாடுவதின் நோக்கம். இந்த மகாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நூற்றாண்டில் பூமியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்ஷியஸ்க்கு கீழே வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு 2030ம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயு என்று சொல்லப்படும் கரியமில வாயு வெளியேற்றத்தை தற்போதுள்ள அளவிலிருந்து பாதியாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால், காற்று மாசுபாட்டின் வெளியேற்றம் 50 சதவிகிதம் அதிகரிக்கும். நீர்நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று மடங்கு அதிகரிக்கும். நாம் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இவற்றை போர்க்கால நடவடிக்கையாக 2040க்குள் செய்வது சுற்றுச்சூழலுக்கு நல்லது.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் முதல் மாநாடு 1973ம் வருடம், ஜெனிவாவின் சுவிட்சர்லாந்து நகரில் நடைபெற்றது. அந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஓரே ஒரு பூமி.’ ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒரு நகரில், அந்த ஆண்டிற்கான கருப்பொருள் முடிவு செய்து இந்த தினம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் டெல்லியில், 2011ம் வருடம் ‘காடுகள் - உங்கள் சேவையில் இயற்கை’ என்ற கருப்பொருளுடனும், 2018ம் ஆண்டு ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்’ என்ற கருப்பொருளுடனும் மாநாடு நடைபெற்றது.
பிளாஸ்டிக் மாசுபாட்டின் பெரும் சுமையைக் குறைப்பதற்குத் தேவையான மாற்றங்களை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளையும், இயற்கையையும் ஒற்றை முறை பிளாஸ்டிக்லிருந்து காப்பாற்ற முடியும். 2018ல் நடந்த இந்த மாநாட்டில், 2022வது ஆண்டிற்குள் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் அகற்றி விடுவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்தது.
2024ம் ஆண்டிற்கான கருப்பொருள், ‘நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்.’ மாநாடு நடைபெறும் இடம் ரியாத், சௌதி அரேபியா. நிலப்பரப்பை பாலைவனமாக்குவதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ‘பூமியின் நிலபரப்பில் 40 சதவிகிதம் சீரழிந்து உலக ஜனத்தொகையில் பாதியை நேரடியாக பாதிக்கிறது. வருடம் 2000 முதல் இதுவரை, வறட்சி ஏற்படும் எண்ணிக்கை, அதன் கால அளவு சுமார் 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2050ம் ஆண்டுக்குள் உலக ஜனத்தொகையில் 75 சதவிகிதம் பாதிப்புக்கு உள்ளாக நேரும்.
இதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் நில சீரமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிக அளவில் காடுகளை உண்டாக்குதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல், மண் வளங்களை மீண்டும் கொண்டு வருதல் போன்றவை முக்கியமான கடமைகள் ஆகும். நாம் வாழுகின்ற பூமியுடன் சமாதானம் செய்து கொண்டு, வளங்களை சீரழிக்காமல் பாதுகாப்பு செய்வது சுற்றுச்சூழலுக்கு நல்லது. இதற்கான ‘கான்ஃப்ரன்ஸ் ஆஃப் பார்ட்டிஸ்’ மாநாடு, இந்த வருடம் டிசம்பர் 2 முதல் 13 வரை சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில், நடைபெற உள்ளது.
இந்த சுற்றுச்சூழல் தினத்தில் நாம் ஒருசிலவற்றை கருத்தில்கொள்ள வேண்டும்:
ஒவ்வொரு ஐந்து வினாடிகளிலும், உலகின் எங்காவது ஓரிடத்தில், கால்பந்து மைதானத்திற்குச் சமமான அளவு மண் அரிப்பு ஏற்படுகிறது. ஆனால், 3 சென்டி மீட்டருக்கு மேல் மண்ணை உருவாக்க 1000 ஆண்டுகள் தேவைப்படும்.
நகர்ப்புறங்களில் மரங்கள் நடுவது, அங்கு வீசும் காற்றை 5 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்விக்கிறது. இதனால் கிடைக்கும் நன்மை ஏர்கண்டிஷனர்களின் தேவையை 25 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும்.
ஏரிகள், ஆறுகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகள் நிலப்பரப்பில் 5 அல்லது 8 சதவிகிதமே இருந்தாலும், அவை உலகிற்குத் தேவையான கார்பனை 20 முதல் 30 சதவிகிதமாக வைத்திருக்கிறது.
நினைவிருக்கட்டும். நிலச்சீரழிவு சுற்றுச்சூழல் மாற்றத்தை பெரிதும் பாதிக்கிறது. ஆனால், நிலச்சீரழிவை தடுக்க முடியும், சரியான வழிமுறைகளை மேற்கொண்டால்.