வைடூரியம் நவரத்தின கற்களில் ஒன்றாகும். இது பூமியிலிருக்கும் தாதுக்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கல் தென்அமேரிக்க, வடஅமேரிக்கா, தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீர் மலைத்தொடர்களிலும் கிடைக்கின்றது. இந்த வைடூரியம் ஆடை ஆபரணங்களில் அதிகமாக உபயோகப்படுத்த படுகின்றது. வைடூரியத்தில் உள்ள கோடுகள் எந்த அளவுக்கு குறுகலாகவும், கூர்மையாகவும் இருக்கிறதோ அதை வைத்தே அதன் தரத்தை பிரிக்கிறார்கள்.
வைடூரியத்திற்கு 7 விதமான குணங்களும் 5 விதமான குற்றங்களும் உண்டு. கருப்பு கலந்த வெண்மை நிறமாக இருப்பது, சமமாக இருப்பது, மாசற்ற தன்மையுடன் இருப்பது, கனம் உடையதாக இருப்பது, நல்ல ஒளியுடையதாக இருப்பது, மேல் ஒளியுடன் இருப்பது, ஒளி சுழற்சி ஆகியன 7 குணங்களாகும். கருமையான நீர் போன்ற நிறம், பலவகை சாறல்கள், கணமின்மை, சொரசொரப்பாக இருப்பது, மேலே ரேகைகளின் சுற்று உடையதாக இருப்பது ஆகிய ஐந்தும் குற்றங்களாகும்.
வைடூரியக்கல்லில் நான்கு ஜாதிகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். வலமாக ஒளி சுழலும் வைடூரியம் அந்தணர் ஜாதி என்றும், இடமாக ஒளி சுழல்வது அரசர் ஜாதி என்றும், மேல் புறமாக ஒளி சுழல்வது வணிகர் ஜாதி என்றும், கீழ்ப்புறமாக ஒளி சுழல்வது வேளாளர் ஜாதி என்றும் கூறப்படுகின்றது. நல்ல வைடூரியத்தை வாங்கி அணியும் போது அனைத்து செல்வ செழிப்பும் கிட்டும், லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும் என்றும் தோஷம் உள்ள வைடூரியத்தை அணியும் போது அவமானம் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. வடநாட்டில் வைடூரியத்தில் லிங்கமாக செய்து வைத்து வழிப்படுகிறார்கள். அவ்வாறு செய்யும் போது நீண்ட ஆயும் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
வைடூரியம் என்பது தமிழ் சொல் கிடையாது. ‘விடாரம்’ என்பதே மருவி காலப்போக்கில் வைடூரியம் என்றானது. விடாரம் என்றால் பூனை என்று பொருள். இந்த கல்லுக்கு இப்பெயர் வரக்காரணம், இந்த கல்லும், பூனையின் கண்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியே இருக்கும். இந்த கல்லின் பெயர் ஆங்கிலத்தில் Cat's eye என்றழைக்கப்படுகிறது. உண்மையான வைடூரியம் வேப்பம்பழ நிறத்தில் இருக்குமாம்.
கேதுவுடைய திசை நடக்கும் போது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இந்த வைடூரியத்தை போட்டு சரி செய்து கொள்ள முடியும். இதை மோதிரமாக அணிந்துகொள்ளும் போது குடும்ப வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். வைடூரியத்தை நடுவிரலில் அணிய வேண்டும். அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வைடூரியத்தை அணியலாம். இதை அணிவதால், வயிறு சம்மந்தமான நோய் தீரும், ஆழ்ந்த மனக்கவலையை போக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.