
உலகில் பல வித்தியாசனமான பழங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஹாலா பழமும் ஒன்று. ஹாலா மரத்தின் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ். இது பாண்டனஸ் இனத்தைச் சார்த்தது. பாண்டனஸ் இனத்தில் 760 வகையான மரங்கள் உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இது வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளருகிறது.
ஹாலா ஒரு கடினமான, வலுவான தாவரமாகும். ஹாலா பழம் ஹவாய்த் தீவு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேலும், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, தென்னிந்தியா, மியான்மர், இந்தோனேசியா போன்ற சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.
ஹாலா பழத்தின் மரம் பார்ப்பதற்கு பனைமரம் போன்று தோற்றமளிக்குமாம். ஹாலா பழம் பார்ப்பதற்கு பெரிய அன்னாசி பழம் போன்று தோற்றமளிக்கும். இதன் ஒரு மலரானது பல சூலகங்கள் அல்லது கார்பெல்களைக் கொண்டது.
பலாப்பழத்தில் இருப்பது போன்று இதிலும் சுளைகள் (ட்ரூப்கள்) காணப்படுகின்றன. இந்த ட்ரூப்கள் சதுரம் முதல் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். நன்கு விளைந்த ஹாலா பழமானது, 10 முதல் 30 செமீ நீளமும் மற்றும் 8 முதல் 20 செமீ அகலமும் கொண்டது.
சில ஹாலா பழங்களின் நடுவில் உண்ணக்கூடிய விதைகள் இருக்கும். அதை வறுத்து உட்கொள்ளலாம். ஹாலா பழம் லேசாகப் பழுத்ததும் ஒருவித மலர் வாசனையை வெளியிடுகிறது. ஆனால், அதை அதிகமாகப் பழுக்க வைத்தால், விரும்பத்தகாத வாசனையை உருவாக்கும்.
ஹாலா பழம் இனிப்பு சுவையைக் கொண்டது. குறிப்பாக, கரும்பு சாறு, மாம்பழம் மற்றும் தேன் சுவையில் இருக்குமாம்.
பெண் மரங்கள் மட்டுமே உண்ணக்கூடிய பழங்களைத் தருகின்றன. அதோடு, இந்த மரங்கள் வளர்ந்து முதிர்ச்சியடைந்து பழங்களைத் தருவதற்கு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம். எனவேதான், இது பெரும்பாலும் பயிரிடப்படுவதில்லை. காடுகளில் இருந்தே சேகரிக்கப்படுகிறது. வணிக ரீதியாகவும் முக்கியத்துவம் பெறவில்லை. மிகவும் அரிதாகவே ஏற்றுமதியும் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்தப் பழம், பெரும்பாலும் சிரப் மற்றும் ஜாம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஹாலா பழ மரத்தின் வேர் மூலிகையாகவும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதன் இலைகள் மற்றும் பூக்களும் மருத்துவகுணம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.
ஹாலாப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல், வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளைப் போக்குவதற்கு உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது. உடலில் நார்ச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது என்ற கருத்துகளும் நிலவி வருகிறது.
ஹாலா பழம் மன அமைதியைத் தூண்டவும், மனத்தைத் தெளிவுப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவும் என்றும் ஹவாய் மக்கள் கருதுகின்றனர். அதேசமயம், இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தே. எனவே, மருத்துவரின் பரிந்துரையின் படி, ஹாலா பழத்தை உண்ணலாம்.