ரப்பர் மர விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் நஷ்டத்தை சமாளிக்க மரங்களை அழித்து வரும் போக்கு அதிகரிப்பு.
கேரளாவில் மலையோரப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிக அளவிலான ரப்பர் தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு முக்கியமான விவசாயமாக ரப்பர் பால் எடுக்கும் செயல்பாடு கருதப்படுகிறது. தற்போது பணப்பயிரான ரப்பர் மரம் வளர்ப்பு பொருளாதார காரணங்களால் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரப்பர் பால் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதற்கான செலவு உயர்ந்து இருக்கக்கூடிய நேரத்தில் ரப்பர் பால் கிலோ 100 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ரப்பர் மரங்களை வளர்க்கும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர். இதனால் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 170 ஏக்கர் ரப்பர் மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் ஒரு டன் ரப்பர் மர கட்டைகளை 7000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
விளைநிலங்கள் அழிப்பது புவி வெப்பமாவதை மேலும் அதிகரிக்கும் என்றும், பல்வேறு வகையான இயற்கை பாதிப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் இது போன்ற செயல்பாடு இயற்கைக்கு மேலும் சிக்கலை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் ரப்பர் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரப்பருக்கு தடை விதிக்க வேண்டும். அதோடு ரப்பர் வணிகத்திற்கான வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.