இன்னும் இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் காயமடைவதைத் தடுக்கும் விதமாக, காளை மாடுகளின் கொம்பில் ரப்பரில் செய்யப்பட்ட பாதுகாப்பு கவசத்தை பொருத்துவதற்காக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டங்களான திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் மிக விமர்சையாக நடத்தப்படும்.
அதே நேரம் இந்த போட்டியை இன்றுவரை பாரம்பரிய முறையில் வணிக நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ் பெற்றவை.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்குவதற்காக பயிற்சி செய்கின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகளை ஆய்வு செய்த இந்திய விலங்குகள் நல வாரியம், மாடுகளும் மாடுபிடி வீரர்களும் இணையத்தில் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்ய வலியுறுத்தியுள்ளது.
அதேபோல ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான மாடுகளை அவிழ்த்து விடாமல், குறைந்தது 50 முதல் 60 காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த 2023ல் ஜல்லிக்கட்டு 950 மாடுபிடி வீரர்களும் 9 காளைகளும் காயம் அடைந்தன. எனவே இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக, போட்டியில் பங்கேற்கும் மாடுகளின் கொம்பில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொருத்த விலங்குகள் நலவாரியமும் தமிழக அரசும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் போட்டிகளை நடத்துபவர்களுக்கு விலங்குகள் நல வாரியம் பல வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.