செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் வாழைப்பழத் தோல் உரம்!

Banana Peel Fertilizer
Banana Peel Fertilizer
Published on

வீட்டுத் தோட்டத்திற்கான உரங்களை சிலர் பணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். வீட்டுத் தோட்டத்திற்கு அதிக அளவில் உரம் தேவைப்படாது. ஆகையால், சமையலறைக் கழிகள் மற்றும் பழத் தோல்களையே உரமாகப் பயன்படுத்தலாம். இது முற்றிலும் நல்ல பலனைத் தரக் கூடியது. அவ்வகையில், வாழைப்பழத் தோலை எப்படி உரமாகப் பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தப் பதிவு.

வீட்டிலேயே தோட்டம் அமைத்துப் பராமரித்து வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாடித் தோட்டத்தின் வரவிற்கு பிறகு தான், பலரும் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். வீட்டுத் தோட்டத்தை பொழுதுபோக்கிற்காக தொடங்கி, பின்னாளில் அதிலேயே அதிக நேரத்தை செலவிடும் இல்லத்தரசிகளும் இங்கு உள்ளனர். தோட்டத்தில் நாம் அதிக நேரத்தை செலவிடும் போது, மனதளவில் மகிழ்ச்சி அடைவதோடு, மன அழுத்தமும் குறைகிறது. தோட்டத்தை சிறப்பான முறையில் பாதுகாக்க வீட்டிலேயே வாழைப்பழத் தோலை உரமாகப் பயன்படுத்தலாம்.

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. நாம் அனைவருமே வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு, அதன் தோலி வீசி விடுவோம். ஆனால், அதிலிருக்கும் ஆச்சரியங்களை அறிந்தால் இனி யாருமே இப்படிச் செய்யமாட்டார்கள். வாழைப்பழத் தோலில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களில் பயன்படுத்தக் கூடிய பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க திறன்களில் முக்கியப் பங்காற்றுகிறது. பொதுவான உரங்களைப் போல் அல்லாமல், வாழைப்பழத் தோல்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கிறது.

பழம் மற்றும் பூக்கும் தாவரங்களுக்கு வாழைப்பழத் தோல் உரங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள பொட்டாசியம் பூக்கும் திறனையும், பாஸ்பரஸ் பழ வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

பயன்படுத்தும் முறை:

செடிகளுக்குப்பயன்படுத்தப்படும் தண்ணீரில் வாழைப்பழத் தோலை 2 முதல் 4 வாரங்களுக்கு ஊற வைத்து, வாழைபழத் தோல் தேநீர் தயாரிக்கலாம். இதனை செடிகளுக்குத் தெளித்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். வாழைபழத் தோல்களை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை செடிகளுக்குச் சேர்த்து, சிறந்த விளைச்சலைப் பெறலாம். இருப்பினும், வெவ்வேறு தாவரங்கள் மற்றும் மண் நிலைகளுக்கு ஏற்ப விளைச்சலில் வித்தியாசம் இருக்கும்.

புதிய வாழைப்பழத் தோல்கள் மெதுவாக சிதைவுற்று, காலப்போக்கில் ஊட்டச்சத்துகளை வெளியிடுகின்றன. ஆனால், உலர்ந்த வாழைப்பழத் தோல்கள் புதிய தோல்களை விடவும் வேகமாக சிதைவுறுகின்றன. இதனால் தாவரங்களால் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது அதிகரிப்பது மட்டுமின்றி, சேமிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழைப்பூ துவையல், வாழைப் பூ பச்சடி இப்படி செஞ்சு பாருங்க..!
Banana Peel Fertilizer

வாழைப்பழத் தோல்களை மிக முக்கிய வணிக அளவிலான உரங்களாகப் பயன்படுத்தினால், மண்ணைக் கெடுக்கும் இரசாயன உரங்களைக் குறைக்க உதவும். மேலும் மண்ணின் அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தையும் இவை மேம்படுத்துகிறது. தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்தி வந்தால் இயற்கையான நுண்ணுயிர் செயல்பாடுகளை அதிகரித்து, ஆரோக்கியமானத் தாவரங்கள் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புக்கு வழிவகுக்கும்.

இனி வாழைப்பழத் தோல்களை சேமித்து வைத்து உரமாகப் பயன்படுத்துங்கள்; சுற்றுச்சூழலைக் காத்து குப்பைகள் சேர்வதைக் குறையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com