

நம் முன்னோர்கள் “செவுத்துக்கோழி” என்று அழைக்கும் ஒரு வகை பூச்சி இனம் சில்வண்டு. இதை சுவர்க்கோழி அல்லது ராக்கோழி என்றும் அழைப்பார்கள். இது எழுப்பும் ஒலியானது மிகவும் விநோதமாக இருக்கும். பொதுவாக இவை இரவு நேரங்களிலேயே இத்தகைய ஒலியை எழுப்பும். நம்மில் பலரும் அந்த பூச்சியைக்காண ஆவலாகத் தேடுவோம். ஆனால் அவை நம் கண்களில் தென்படாது. அது எங்கு இருந்து ஒலியை எழுப்புகிறது என்பதை அறிந்துகொள்ள நாம் ஒலி வரும் திசையை நோக்கிச்சென்றால் அது ஒலி எழுப்புவதை நிறுத்திக் கொண்டு அமைதியாகிவிடும்.
ஆங்கிலத்தில் கிரிக்கெட் பூச்சி (Cricket) என அழைக்கப் படும் சுவர்க்கோழிகள் உருளை வடிவ உடலையும் வட்டமான தலையையும் உணர்கொம்புகள் எனப்படும் நீண்ட ஆண்டெனாக்கள் மற்றும் குதிப்பதற்கான பெரிய பின்னங்கால்களைக் கொண்டு அமைந்துள்ளன.
உலகம் முழுவதும் சுவர்க்கோழிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவை புல்வெளிகள், புதர்கள், காடுகள், சதுப்பு நிலங்கள் என பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகின்றன. சிள்வண்டுகள் இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவண்ணம் இருக்கும். இவற்றின் உடலில் புரதச்சத்து அதிகஅளவில் உள்ளது.
பொதுவாக மழைக்காலங்களில் இவை அதிக ஒலியை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் விட்டு விட்டு ஒலியை எழுப்பும். இந்த ஒலிக்கும் சுற்றுப்புற வெப்பநிலைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமோஸ் டோல்பியர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சுவர்க்கோழி எழுப்பும் ஒலிக்கும் அது வாழும் சுற்றுப்புற வெப்பநிலைக்கும் தொடர்பு இருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிந்து கி.பி.1897 ஆம் ஆண்டில் ‘The Cricket as a thermometer’ என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டுள்ளார்.
சுவர்க்கோழிகள் குறைந்த வெப்பநிலையைவிட அதிக வெப்பநிலையில் வேகமாக ஒலியை எழுப்புகின்றன என்ற உண்மையை அமோஸ் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். இந்த விதியானது “டோல்பியர் விதி” என்று அழைக்கப்படுகிறது. வெப்பநிலையைப் பொறுத்துச் சில பொருள்களின் பண்புகள் மாறுகின்றன. உதாரணமாக பாதரசமானது வெப்பத்தால் விரிவடையும் தன்மைகொண்டது. வெப்பநிலையை அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாற்போல் அதன் விரிவடையும் தன்மையும் அதிகமாகிறது. இதை வைத்து நாம் நமது உடலின் சூட்டை அறிந்து கொள்ள முடிகிறது.
மற்ற பூச்சிகளைப்போல இவை கத்தி ஒலியை எழுப்புவதில்லை. சுவர்க்கோழி எழுப்பும் “க்ரீச்” “க்ரீச்” என்ற ஒலியானது அது தன் இறக்கைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்றோடு ஒன்று உராய்வதன் காரணமாக உண்டாகிறது. இந்த செயல் Stridulation என அழைக்கப்படுகிறது.
இரண்டு இறக்கைகளையும் ஒன்றோடு ஒன்று தேய்ப்பதன் மூலம் விநோதமான சத்தமான ஒரு ஒலி உண்டாகும்.
சுவர்க்கோழியில் ஆண் இனம் மட்டுமே ஒலியை எழுப்பும். பெண் இனம் ஒலியை எழுப்புவதில்லை. ஆனால ஆண் வண்டுகள் கடிப்பதில்லை. பெண் வண்டுகள் கடிக்கும். சுவர்க்கோழிகள் அழுகிய தாவரங்கள், பூஞ்சை மற்றும் மிகச் சிறிய பூச்சிகளை உண்ணும் இயல்புடையன.