

யானைகளின் ஆயுட்காலம் அவற்றின் பற்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. யானையின் வாயில் உணவை மென்று கூழாக்கும் பணியைச் செய்வது பக்கத்திற்கு இரண்டாக அமைந்துள்ள நான்கு பற்கள்! இந்த நான்கு பற்களும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விழுந்து மறுபடியும் முளைக்கின்றன. இவ்வாறு ஐந்து முறை விழுந்து முளைத்ததும் - கடைசி முறையாக விழுந்த பிறகு முளைப்பதில்லை . அதன் பின்னர் முதுமை, அஜீரணம்,பேதி, தூக்கம் இவற்றால் யானைகள் மரணமடைகிறது.
புலிகளின் வேட்டைக்கு மட்டுமல்ல அதன் வாழ்க்கைக்கே ஆதாரம் அதன் வாயில் அமைந்துள்ள நான்கு கோரைப் பற்கள்தான். இவற்றில் ஒன்று விழுந்துவிட்டாலும் புலிகளினால் பெரிய பிராணிகளைக் குத்திக் கிழித்துத் தின்ன முடியாது. மான், ஆடு, முயல் போன்ற சிறிய பிராணிகளை மட்டும்தான் கொன்று தின்னும்.
நண்டுகள் அவற்றின் கால்களை பயன்படுத்தி உணவின் சுவையை அறியும் திறன் கொண்டவை என்பது பலரும் அறியாத வியக்கத்தக்க உண்மையாகும். அவற்றின் பற்கள் வாய்க்குள் இல்லாமல் வயிற்று பகுதியில் அமைந்துள்ளதால், உணவை உள்ளே தள்ளிய பிறகே அவை அரைக்கப்படுகின்றன. சில வகை நண்டுகள் நிலத்திலும் நீரிலும் வாழும் வகையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டு பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன.
எலிகள் கண்டதையெல்லாம் கடித்து வீணாக்குவது ஏன் தெரியுமா? எலிகள் இப்படி ஓயாமல் கண்டதையெல்லாம் கடித்து தனது பற்களைத் தேயச் செய்யாவிட்டால் அது முதுமையடையும்போது அதன் முன் பற்கள் மூன்றடி நீளம் வளர்ந்துவிடும்.
கடலில் வாழும் ஷார்க் என்ற மீனுக்கு மிக அதிசயமான பற்கள் அமைந்துள்ளன. ஷார்க்கின் முன்புறப் பற்கள் தேய்ந்து விழுந்தவுடன், பின் புறமுள்ள பற்கள் முன் புறத்திற்கு நகர்ந்து வருகின்றன. ஆனால், அவற்றின் உறுதி மட்டும் குறையாது.
சில அபூர்வ மீன் வகைகள், கடல் ஆமைகள் அவற்றின் வயிற்றில் அன்னக் குழாய்களிலேயே பற்கள் அமைந்துள்ளன. இந்தப் பற்கள் கூர்மையாகவும் கும்பலாகவும் இருக்கும். இவை விழுங்கும் இரையைக் குத்திக் கிழித்து புரட்டி கூழாக்கும்.
சில பறவைகளுக்கு கற்கள் பற்களாக செயல்படுகின்றன. பறவைகள் இரைகளை விழுங்கும்போது அதனுடன் சிறு கற்களையும் தேர்ந்தெடுத்து விழுங்குகின்றன. இந்தக் கற்கள் பற்களைப் போலவே வேலை செய்து வயிற்றிலுள்ள உணவுப் பொருட்களை மிக மிருதுவான பொடியாக அரைக்கின்றன. இந்த அரவை மிகவும் வேகமாக நடக்கும். பறவைகள் எப்படி தங்களது தேவைக்கு ஏற்ப எப்படி கற்களை தேர்ந்தெடுத்து விழுங்குகின்றன. பின்னர் எப்படி அவற்றை வெளியேற்றி புதிய கற்களை விழுங்குகின்றன என்பதும் புரியாத புதிர்.
பற்களே இல்லாத ஒரு வகைப் புழு தனது வாயில் சுரக்கும் சல்ஃபரிக் அமிலம் கலந்த உமிழ்நீரை தனது உணவுப் பொருட்களான சிறு பூச்சிகள் மீது பாய்ச்சுக்கிறது. இதனால் பூச்சியின் தோல் கிழிந்து மிருதுவான பாகம் வெளிப்படுகிறது. புழு தனது வாயில் அமைந்துள்ள சிறு கொம்பின் மூலம் மிருதுவான உடல் பாகங்களை குத்தி உண்கின்றன.
சுமார் 35 மில்லியன் ஆண்டுகளாக சிறந்த வேட்டையாடிகளாக திகழும் கழுகுகள், 5 கி.மீ தொலைவில் உள்ள இரையையும் துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டவை. ஒரு டன் எடை கொண்ட பிரம்மாண்ட கூடுகளை கட்டும் இவை, தனது அலகிலுள்ள 'டோமிலா' என்ற அமைப்பின் மூலம் இரையை நொடியில் வீழ்த்துகின்றன. இரையை தேடி பிடிக்க மணிக்கு 241 கி.மீ வேகத்தில் பாயும் ஆற்றல் கொண்ட கழுகுகள், வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் பண்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. இவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக கற்களை விழுங்குகின்றது. அதற்கு பற்கள் இல்லாததால், அவற்றால் உணவை நன்கு மென்று துண்டாக்கி செரிக்க முடியாது. எனவே, இவை உணவை வயிற்றுக்குள் உணவை நன்றாக அரைக்க வேண்டும் என்பதற்காக கற்களை சாப்பிடுகின்றது. இந்த கற்கள் தசைப்பையில் (gizzard) தங்கி, உட்கொள்ளும் உணவை அரைத்து உடைக்க பெரிதும் துணைபுரிகின்றது. அதனால் அதன் செரிமானம் எளிதாகின்றது.