அன்றாட வாழ்வுக்கு அவசியமான பொருட்கள் என்று பட்டியலிட்டால் அதில் முக்கியமான பொருளாக தேவைப்படுபவைவற்றில் தீக்குச்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. தீப்பெட்டி இல்லாத வீடுகளே இருக்காது என்றுகூடச் சொல்லலாம். ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வீடு வரை அனைத்து இடங்களிலும் அவசியப் பொருளாக விளங்குவது தீக்குச்சிகள்தான். தீக்குச்சிகள் எப்படித் தயாராகின்றன? அதில் என்னென்ன வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன? அதை தீப்பெட்டியோடு உரசினால் எப்படி தீப்பற்றி எரிகிறது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தீக்குச்சி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள்: தீப்பெட்டி உற்பத்தியில் வெவ்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, தீப்பெட்டி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ரசாயனத்திற்கும் சில பயன்கள் உள்ளன. இனி, தீப்பெட்டி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயன வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பைன் மரக் குச்சிகளை வலுப்படுத்த அமோனியம் பாஸ்பேட் மற்றும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. தீக்குச்சியின் தலையில் உள்ள ரசாயனக் கலவை பொட்டாசியம் குளோரேட் மற்றும் ஆன்டிமனி ட்ரைசல்பைடு. தீப்பெட்டியின் உராய்வு அட்டையை தயாரிக்க பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உராய்வை அதிகரிக்க இதில் கண்ணாடி தூள் சேர்க்கப்படும்.
தீக்குச்சியின் தலையில் உராயும் பகுதியில் சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் கண்ணாடித் தூள் ஆகியவை பயன்படுத்தப்படும். தீக்குச்சியின் தலைக்கு துத்தநாக ஆக்ஸைடு மூலம் வண்ணம் கொடுக்கப்படும்.
தீக்குச்சி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?: முதலில், மரக் குச்சிகள் தயாரிக்கப்பட்டு அமோனியம் பாஸ்பேட்டில் ஊற வைக்கப்பட்டு பின்பு உலர்த்தப்படும். பிறகு, அக்குச்சிகள் எளிதாக எரிவதற்கு சூடான பாரஃபின் மெழுகில் ஊற வைக்கப்படும். பிறகு தீக்குச்சிகள் கன்வேயர் பெல்ட்டுக்கு மாற்றப்படுகின்றன. அங்கு குச்சிகள் சீராக அடுக்கப்பட்டு பின்னர் இரண்டு வேதிப்பொருட்களைக் கொண்ட தொட்டிகளுக்கு நகர்த்தப்படும். ஒன்று அடித்தளத்திற்கும் அடுத்து தீக்குச்சியின் தலைக்கும் வேதி பொருட்களைப் பூசும். பின்னர், தீக்குச்சி உலர வைக்கப்படும்.
தீக்குச்சி எவ்வாறு எரிகிறது?: தீக்குச்சியின் தலையில் உள்ள பொட்டாசியம் குளோரைடும் உராய்வு அட்டையில் உள்ள பாஸ்பரஸும் வினைபுரிவதன் காரணமாக தீக்குச்சி பற்றி எரிகிறது. தீக்குச்சியை சொரசொரப்பு உள்ள அட்டையில் உராயச் செய்யும்பொழுது பாஸ்பரஸ் மற்றும் குளோரைட் கலவை ஒரு சிறிய அளவில் வெடிக்கும். இதன் மூலம் தீக்குச்சி பற்றி எரிகிறது.
நாம் சர்வசாதாரணமாக நினைக்கும் இந்த ஒரு சிறிய தீக்குச்சியை தயாரிக்க இத்தனை வேலைகள் நடைபெற வேண்டி இருக்கிறது. இனி, சின்ன தீக்குச்சிதானே என இதை ஏளனமாக நினைக்க வேண்டாம். ஒரு காட்டையே கூட எரிக்கும் ஆற்றல் ஒரே ஒரு தீக்குச்சிக்கு இருக்கிறது.