குளிர்காலமும் சளியும் ஒன்றுக்கொன்று இணை பிரியாத தோழர்கள். அதிலும் சளி பிடித்து விட்டால் தொண்டைப்புண், சுவாசிப்பதில் பிரச்னை போன்ற மற்றவற்றையும் உடன்சேர்த்து கொள்ளும். ஏற்கெனவே ஆஸ்துமா சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் குளிர்காலத்தில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நெஞ்சு சளியைக் கரைக்க இயற்கை வைத்தியத்தில் ஒன்று மூலிகை மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு டீக்களை தயாரித்து குடிப்பது. அந்த வகையில் நெஞ்சு சளியைக் கரைக்க உதவும் 3 வகை மூலிகை டீக்கள் பற்றியும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
1. இஞ்சி - துளசி டீ: இஞ்சி, துளசி ஆகிய இரண்டுமே ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளதோடு, இவ்விரண்டும் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களாகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால், இது தொண்டைப் புண் மற்றும் சளியைக் குறைக்க உதவுகிறது. அதேபோல், துளசியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது.
செய்முறை: துளசியின் 6 இலைகளை எடுத்து 1 கப் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, தினமும் காபி, டீக்கு பதிலாக குடிக்க, நெஞ்சு சளி விரைவில் கரைய ஆரம்பிக்கும்.
2. மஞ்சள் மற்றும் பட்டை டீ: மஞ்சள், பட்டை ஆகிய இரண்டிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பட்டையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், இந்த டீ உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது, சளியைக் குறைக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. அதிமதுரம் மற்றும் கிராம்பு டீ: அதிமதுரம், கிராம்பு ஆகிய இரண்டுமே சளியைக் குறைத்து, தொண்டை வலியை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. அதுவும் அதிமதுரத்தில் ஆன்டி வைரல் பண்புகள் அதிகம் உள்ளன. அதேபோல், கிராம்பில் உள்ள மருத்துவப் பண்புகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட அதிமதுரம் மற்றும் பட்டைக் கொண்டு டீ தயாரித்து குளிர்காலத்தில் குடித்து வந்தால், குளிர்காலத்தில் சந்திக்கும் சளி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
செய்முறை: ஒரு கப் நீரில் சிறிய துண்டு அதிமதுரம் மற்றும் 2 அல்லது 3 கிராம்புகளை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், தொண்டை மற்றும் சுவாசப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேற்கூறிய மூன்று வகை டீ வகைகளும் சுவாசப்பாதை பிரச்னையை சரியாக்கி சளியை விரட்டுவதில் விரைந்து செயல்புரியும்.