
சந்தைத் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விவசாயம் செய்தால், விவசாயிகளால் நல்ல லாபத்தைப் பெற முடியும். பொதுவாக உள்ளூர் சந்தைகளில் கேரட், பீட்ருட், அவரைக்காய், பீன்ஸ் மற்றும் முருங்கைக்காய் உள்ளிட்ட பல காய்கறிகள் விற்பனையாகின்றன. புதுவிதமான வெளிநாட்டு காய்கறிகள் அவ்வளவாக இங்கு விற்பனையாவதில்லை. ஆனால் அம்மாதிரியான காய்களுக்கு உள்ளூரில் நல்ல டிமாண்ட் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காய்கறி தான் புல்லாங்குழல் பூசணி.
புல்லாங்குழல் பூசணியின் பெயரே சற்று வித்தியாசமாக உள்ளது அல்லவா! ஆனால் இதன் உருவத்தைக் கண்டால் அனைவருக்கும், இந்தக் காய்கறியை எங்கோ பார்த்திருக்கிறோம் எனத் தோன்றும். ஏனெனில் நம் ஊரில் கிடைக்கும் பீர்க்கங்காய் போன்று தான் இருக்கும் இந்த புல்லாங்குழல் பூசணி. ஆனால் சற்று பெரிதாக இருக்கும்.
டெல்ஃபைரியா ஆக்சிடென்டலிஸ் (Telfairia Occidentalis) என அழைக்கப்படும் புல்லாங்குழல் பூசணி, மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதோடு இதற்கான மதிப்பும் அங்கு அதிகம். ஆனால், இந்தக் காய்கறி பற்றிய போதிய விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லை. தளிர்கள், இலைகள் மற்றும் விதைகளுக்காக இவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
வெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளரக்கூடிய புல்லாங்குழல் பூசணி, கரிமப் பொருட்கள் அதிகமுள்ள மண்ணில் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். புல்லாங்குழல் பூசணியை நன்கு வளர்ந்த ஆரோக்கியமான தண்டுகள் மற்றும் விதைகளின் மூலம் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளை முதலில் நாற்றாங்கால் தட்டுகளில் விதைத்து, அதன் பின்னர் வயலுக்கு இடமாற்றம் செய்து கொள்ளலாம். தண்டுகளை நேரடியாகவே வயலில் நட்டும் வளர்க்கலாம்.
மழைக்காலத்தில் புல்லாங்குழல் பூசணியை நடவு செய்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். நடவின் போது ஒவ்வொரு செடிக்கும் 1மீ முதல் 2மீ வரையிலான இடைவெளியுடன், வரிசை முறையில் இருப்பது நல்லது. செடிகளை இடைவெளி விட்டு நட்டால், வளரும் போது நல்ல காற்றோட்ட சுழற்சி கிடைக்கும். இதன்மூலம் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களை தவிர்க்க முடியும்.
புல்லாங்குழல் பூசணிக்கும் மற்ற காய்கறிச் செடிகளைப் போலவே நீர்ப்பாசனம் செய்தால் போதுமானது. மழைக்காலத்தில் களைகள் வளரும் என்பதால், அச்சமயத்தில் தழைக்கூளம் அமைத்து களைகளைத் தடுக்கலாம். அதோடு இது ஈரப்பதத்தையும் தக்க வைக்க உதவுகிறது.
நடவு செய்வதற்கு முன்பே, மண்ணின் வளத்தை மேம்படுத்த நன்றாக அழுகிய உரங்களை நிலத்தில் இட வேண்டும். இது நிலத்தில் கரிமப் பொருட்களை அதிகரிக்கும். நடவுக்குப் பின், வளரும் பருவத்தில், செடிகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த கூடுதல் உரங்களை இட வேண்டும்.
அறுவடை: புல்லாங்குழல் பூசணிச் செடிகள் 4 முதல் 6 வாரங்களில் வளர்ந்து விடும். இதில் நன்கு முதிர்ந்த இலைகளை அறுவடை செய்யலாம். அதே நேரம் ஒரு செடியில் உள்ள அனைத்து இலைகளையும் அகற்றக் கூடாது. இதன் தளிர்கள் 10 முதல் 15 செ.மீ. உயரம் வரை வளர்ந்ததும் அறுவடை செய்து கொள்ளலாம். பழங்களை மட்டும் முழுமையாக முதிர்ச்சியடைந்த பிறகே அறுவடை செய்ய வேண்டும்.
இலை, தளிர் மற்றும் பழம் என புல்லாங்குழல் பூசணியில் அனைத்துப் பகுதிகளையும் விற்பனை செய்ய முடியும். ஆகையால், ஆர்வமுள்ள விவசாயிகள் இதன் விதைகளை அருகிலுள்ள தோட்டக்கலைத்துறையில் வாங்கிக் கொள்ளலாம்.