அனைத்து விதமான விவசாய சாகுபடி மற்றும் உப தொழில்கள் சம்மந்தமாக விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது ஆலோசனை பெற வேண்டுமானாலோ கிசான் கால் சென்டரை அணுகினால் உடனடித் தீர்வு கிடைக்கும். இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து துறைகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதற்கு விவசாயமும் விதிவிலக்கல்ல. விவசாயத்திலும் அவ்வப்போது புதுப்புது தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு படிதான் விவசாயிகளுக்கு உதவும் கிசான் கால் சென்டர். விவசாயத்தில் இலவசமாக ஆலோசனை பெற ஒரே ஒரு போன் கால் போதும். ஆனால் இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பதே பல விவசாயிகளுக்குத் தெரியாது.
கிசான் கால் சென்டர்:
பாரம்பரிய விவசாயம் படிப்படியாக குறைந்து வந்தாலும், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சில விவசாயிகள் பயணிக்கிறார்கள். விவசாயத்தில் காலநிலைக்கேற்ப அவ்வப்போது உண்டாகும் பிரச்சினைகளுக்கு யாரை அணுகி எப்படித் தீர்வு காண்பது என வழி தெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இதற்கு தீர்வு காண்பதற்காகத் தான் இந்திய வேளாண்மை அமைச்சகம், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று நாடு முழுவதும் விவசாயிகளின் வசதிக்கு ஏற்ப அவரவர் தாய் மொழியில் கிசான் கால் சென்டர்களை (Kisan Call Centre) தொடங்கியது. இந்த இலவச சேவை தொடர்ந்து 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப விவசாயிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள கிசான் கால் சென்டர் பெரிதும் பங்காற்றி வருகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை, விவசாயிகள் கிசான் கால் சென்டரைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கட்டணமில்லாத அலைபேசி எண் 1800-180-1551 என்ற 11 இலக்க எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினைகளை விவசாயிகள் தெரிவிக்கலாம்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு கிசான் கால் சென்டரில் பணிபுரியும் ஆபரேட்டர்கள் சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் சரியான தீர்வுகளை அளிப்பார்கள். எடுத்துக்காட்டாக பயிரில் திடீரென காணப்படும் பூச்சி அல்லது நோய் தாக்குதலுக்கான தீர்வுகள் மற்றும் இதர சாகுபடிக்கான தொழில்நுட்பத் தகவல்களையும் கிசான் கால் சென்டர்களின் மூலம் பெற முடியும்.
தனியார் தொண்டு நிறுவனம்:
தனியார் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் (RELIANCE FOUNDATION) இலவச உதவி எண் மூலமாக விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கிறது. கட்டணமில்லாத அலைபேசி 1800-419-8800 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், மறுமுனையில் வேளாண் சம்பந்தப்பட்ட உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க தொழில்முறை வல்லுநர்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்கி உதவுவார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் காக்கும் கிசான் கால் சென்டரின் தொடர்பு எண்ணையும், தனியார் நிறுவனத்தின் உதவி எண்ணையும் அனைத்து விவசாயிகளும் தங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.