ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் வரப்போகிறது என்று ஒரு விலங்கு சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீன அறிஞர்கள் விலங்குகளின் நடத்தையைக் கூர்ந்து கவனித்தனர். மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பூச்சிகள் வரை, இயற்கை பேரிடர்களைக் அவை நிகழ்வதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே அல்லது சில நிமிடங்களிலேயே கணிக்கின்றன என்று நம்பினர். இது ஒரு அறிவியல் கட்டுக்கதை என நினைக்கலாம். நவீன ஆராய்ச்சியாளர்களும் இதேபோன்ற சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
கஜகஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், இரவில் திரியும் விலங்குகளான முள்ளம்பன்றிகள் மற்றும் ஆந்தைகள் போன்வை நிலநடுக்க அதிர்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதைக் கண்டறிந்தனர். பொதுவாக இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த உயிரினங்கள், நிலநடுக்கம் வருவதற்கு சற்று முன்பு பகலில் நடமாடத் தொடங்கின. எலிகள் போன்ற பொந்தில் வாழும் விலங்குகள், பூகம்பம் வருவதற்கு முன்பே தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதையும் அவர்கள் கண்டனர்.
இதேபோல், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு அல்லது சில மணிநேரங்களுக்கு முன்பு நாய்கள் பதட்டமாக இருப்பதையும், குரைப்பதையும், துடிப்புடன் இருப்பதையும் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. குறிப்பாக, யானைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட அகச்சிவப்பு ஒலியை தங்கள் கால்கள் மூலம் உணரக்கூடியவை.
2004 ஆம் ஆண்டு இலங்கையின் யால தேசிய பூங்காவில், சுனாமி அலைகள் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை உள்நுழைந்தபோதிலும், ஒரு விலங்குகூட பலியாகவில்லை. விலங்குகள், பூகம்ப அதிர்வுகளையோ அல்லது அலைகளின் ஓசையையோ உணர்ந்து, பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களால் உணர முடியாத உயர் அதிர்வெண் கொண்ட அதிர்வுகளுக்கு நாய்கள் எதிர்வினையாற்றலாம் என்று ஆய்வில் கூறப்படுகிறது. அதுவும் சிறிய காதுகள் கொண்ட நாய்கள் இதற்கு இன்னும் அதிகமாக எதிர்வினையாற்றுவதாகத் தெரிகிறது.
பல விலங்குகள் பேரிடர்களை உணர்கின்றன என்பதற்குப் பல சான்றுகள் இருந்தாலும், இந்த நடத்தைக்கும், பேரிடர்களுக்கும் இடையே நேரடி அறிவியல் தொடர்பு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனினும், ஒரு சில ஆராய்ச்சியாளர்கள், விலங்குகள் காந்தப்புலங்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது காற்றின் அயனியாக்கம் போன்ற நுட்பமான சுற்றுச்சூழல் மாற்றங்களை உணர்ந்து கொள்வதால் இது நடக்கலாம் என்று நம்புகின்றனர்.
விலங்குகளின் இந்த திறனைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், எதிர்காலத்தில் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் அமைப்புகளில் அவை முக்கியப் பங்காற்றக்கூடும். மனிதர்கள் இயற்கை பேரிடர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.