
இயற்கை பேரிடர்களின் அறிகுறியாக கடல் திடீரென உள்வாங்குவது ஏற்படும். அது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அறிகுறியாக இருக்கலாம். கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் உயர்வது மற்றும் தாழ்வது, கடல் நீரின் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக காட்சி தருவது போன்ற மாற்றங்கள் கடலில் சில சமயங்களில் நிகழ்கின்றன. கடல் நீரோட்டங்கள், காற்றின் வேகம், பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களாலும் கடல் உள்வாங்கலாம்.
சுனாமி:
சுனாமி அலைகள் கடலுக்குள் நுழைவதற்கு முன்பு கடல் உள்வாங்குவது என்பது பொதுவான அறிகுறியாக உள்ளது. சுனாமி, சூறாவளி, கடல் வெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காரணமாக கடல் உள்வாங்கலாம். மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடல் உள்வாங்குவதைக் கண்டால் கடலை நோக்கி செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சுனாமி போன்ற பேரழிவுகளின் பொழுது கடல் மிகத் தீவிரமாக உள்வாங்கும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடல் உள்வாங்கி பின்பு கடல் நீர் வெள்ளம் போல் வந்து மக்களை இழுத்துச் சென்றதை மறக்க இயலாது.
பருவநிலை மாற்றங்கள்:
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் கடல் மட்ட மாறுதல்கள் கடல் உள்வாங்குவதற்கு காரணமாக இருக்கலாம். புவி வெப்பமயமாதல் மற்றும் பனிப்பாறைகள் உருகும் காரணங்களினால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதன் விளைவாக கடல் நீர் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்து உள்வாங்குகிறது. கடல் நீர் மட்ட உயர்வு, கடலோரப் பகுதிகளில் நிலத்தை மூழ்கடித்து கடல் நீர் உள்வாங்க காரணமாக அமைகிறது.
தீவிரமான புயல் அலைகள் காரணமாகவும் கடல் நீர் நிலப் பகுதிகளை மூழ்கடித்து உள்வாங்க காரணமாகிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அதற்கு சில நாட்களுக்கு முன்பும் பின்பும் கடல் உள்வாங்குவது என்பது இயல்பாக நடைபெறும். புவி வெப்பமயமாதல் என்பதன் பின்னணிதான் கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடப்பதன் அடிப்படை காரணம் எனலாம்.
காற்று:
காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது கடலின் மேற்பரப்பு நீரை தள்ளி உள்வாங்க செய்யலாம். கோடை காலத்தில் கடல் நீர் மட்டம் குறைவாக இருக்கும் பொழுதும், காற்றின் வேகம் அதிகரிக்கும் போதும் கடல் உள்வாங்குவது போலத் தோன்றும். கோடை காலத்தில் இது இயல்பான ஒரு நிகழ்வுதான் என்றாலும் காற்றின் வேகம் பொறுத்து மாறுபடுவது வழக்கம்.
கடல் காற்று அதிகமாக இருக்கும் பொழுது கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரை இடமாற்றம் செய்து கடற்கரையிலிருந்து கொண்டு செல்கின்றன. இந்த கடல் நீர் உள்வாங்குதல் என்பது வானிலையை பொறுத்து அமைகிறது.
கடல் நீரோட்டம்:
கடல் நீரோட்டங்கள் வலுவாக இருக்கும் சமயங்களில் அவை நீரை உள் இழுத்து கடல் நீரை உள்வாங்க செய்யலாம். கரையிலிருந்து கடல் வெகு தொலைவில் இருப்பதாக நினைத்து கடலை நோக்கிச் செல்லும் போது உள்வாங்கிய கடல் மீண்டும் வரும்போது விபத்துகள் ஏற்படலாம். அத்துடன் கடல் உள்வாங்கியதால் வெளிப்படும் பாறைகள் பாசியால் மூடப்பட்டிருக்கும். எனவே அப்படி செல்வதால் வழுக்கி விழும் அபாயம் உண்டு. எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நிலநடுக்கம்:
நில நடுக்கத்தின் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்படும் மாற்றங்கள் கடல் உள்வாங்க காரணமாக இருக்கலாம். பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற சூழல்களில் தீவிரமாக கடலோரப் பகுதிகளில் கடல் உள்வாங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் புவி தட்டுகளின் நகர்வுகளால் கடலின் அடிப்பகுதியில் உள்ள அழுத்தம் மாறுபடுவதே ஆகும்.
கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் நிலப்பரப்பு அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு நீருக்கடியில் உள்ள அழுத்தம் மாறுபடுகிறது. இதனால் நீரை உள்வாங்கவோ வெளியேற்றவோ செய்கிறது. நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தினால் கடலின் நீர் உள்வாங்கி பின்பு பெரிய அலைகளாக வெளிவரும்.