உலகில் உள்ள பல்வேறு விதமான சிலந்தி வகைகளில் Funnel Web எனப்படும் ஒரு வகை சிலந்தி தனித்து நிற்கிறது. அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் விஷத்தன்மையால் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. அதாவது உலகிலேயே அதிக விஷத்தன்மை வாய்ந்த சிலந்தி இனம் இதுதான். இது ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுவதால், ஆஸ்திரேலியன் ஸ்பைடர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வகை சிலைகள் அவற்றின் வித்தியாசமான வலை பின்னலுக்கு புகழ்பெற்றவை. இதன் கூடு பெரும்பாலும் தாவரங்களின் அடிப்பகுதியிலோ அல்லது தரையிலையோ புனல் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஏதாவது புழு, பூச்சிகள் தெரியாமல் உள்ளே நுழையும்போது, சத்தம் இல்லாமல் காத்திருந்து தன் இரையை வேட்டையாடும் வல்லமை படைத்தது இந்த சிலந்திகள். புனல் போன்ற வடிவமைப்பில் பின்னப்படும் வலைகள், இரண்டு விதமாக பயன்படுகிறது. சிலந்திகள் ஓய்வெடுக்க சிறந்த தங்குமிடமாகவும், புழு பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பொறியாகவும் செயல்படுகிறது.
ஆபத்தான விஷம்: இந்த பயங்கர சிலந்திகளின் விஷமானது மிகவும் கொடியதாகும். முழுக்க முழுக்க நியூரோ டாக்ஸின்களால் நிறைந்த இதன் விஷம், ஒரே கடியில் மரணத்தை விளைவிக்கக் கூடியதாகும். இதன் விஷம் செலுத்தப்பட்ட இரை விரைவாக செயலிழந்து விடுவதால், தனக்கு பசிக்கும்போது உணவை உட்கொள்கிறது இந்த சிலந்திகள். இவற்றால் மனிதர்கள் கடிபடுவது அரிதுதான் என்றாலும், ஒருவேளை கடிபட்டால் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தி இறுதியில் மரணம் கூட ஏற்படலாம்.
பொதுவாகவே இவ்வகை சிலந்துகளில், ஆண் சிலந்திகள் பெண் சிலந்திகளை விட சிறிதாகவே இருக்கும். ஆண் சிலந்திகள் பெண் துணையைத் தேடுவதற்கு ஒரு ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டும். பெண் சிலந்திகளை கவர்வதற்காக இவைகள் செய்யும் போராட்டத்தில், சில சமயம் பசியுள்ள பெண் சிலந்திகளுக்கு உணவாக மாறும் அபாயமும் உள்ளது. ஒருவேளை இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றால், தன் இனத்தை வளர்ப்பதற்கான வாய்ப்பு இந்த சிலந்திக்கு வழங்கப்படுகிறது.
இப்படி பிறருக்கு ஆபத்தான விஷம் கொண்ட சிலந்திக்கு, தன் இனத்திலேயே ஆபத்து இருக்கிறது என்பதை நினைக்கும்போது இயற்கையின் அற்புதமான சமநிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.