இயற்கையின் அதிசய உலகில் ஒரு வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்ட மர்மமான செடி ஒன்று உள்ளது. அதுதான் கோஸ்ட் பிளான்ட் எனப்படும் பேய் செடி. சராசரி தாவரங்களைப் போல குளோரோஃபில் நிறைந்து பச்சை நிறத்தில் காணப்படாமல், பல வண்ணங்களில் நிழலில் செழித்து வளரும் தாவரமாக இது விளங்குகிறது.
இந்தத் தாவரத்தை இந்திய பைப் அல்லது கார்பஸ் பிளான்ட் என்றும் அழைக்கிறார்கள். இதன் பயமுறுத்தும் தோற்றத்திற்காகவே இது பேய் தாவரம் என அழைக்கப்படுகிறது. ஒளி ஊடுருவக் கூடிய மெழுகு போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் இது, வழக்கமான தாவரங்களைப் போலல்லாமல் முற்றிலும் வித்தியாசமாகக் காணப்படுகிறது. இந்தத் தாவரத்தில் உள்ள குளோரோபில் குறைபாடு காரணமாகவே வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இவை இருக்கின்றன.
பெரும்பாலான தாவரங்கள் தங்களின் உணவுக்காக சூரிய ஒளியை நம்பி இருக்கும்போது, இந்த கோஸ்ட் பிளான்ட் மட்டும் வேறு பாதையில் செல்கிறது. இவை குறிப்பிட்ட மைக்கோரைசல் பூஞ்சைகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு அவை மூலமாக தனக்கான உணவை தயாரித்துக் கொள்கின்றன. இதன் மூலமாக சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு நுட்பமான சமநிலை ஏற்படுகிறது எனலாம்.
கோஸ்ட் பிளான்ட், பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி மண்ணில் உள்ள அழுகும் கரிம பொருள்களிலிருந்து தனக்கான உணவை பெற்றுக் கொள்கின்றன. இவை மூலமாக பூஞ்சைகளுக்கு சுற்றியுள்ள மரங்களிலிருந்து உற்பத்தியாகும் கார்போஹைட்ரேட் கிடைக்கிறது. மற்ற தாவரங்களைப் போல இதற்கு சூரிய ஒளி தேவையில்லை. எனவே, அடர்ந்த காடுகள் முதல் நிழல் நிறைந்த மலைப் பகுதிகள் வரை எல்லா இடங்களிலும் இவற்றைக் காணலாம்.
சூரிய ஒளி இல்லாமல் ஒரு தாவரத்தால் செழித்து வளர முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், இந்தப் பேய் தாவரம் மட்டும் முற்றிலும் வித்தியாசமாக தனித்து நிற்பது நம்மை வியக்கச் செய்கிறது. இப்படி விதிவிலக்காக உள்ள சில விஷயங்களும் இயற்கைக்கு அழகு சேர்க்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.