
தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், வைரம் போன்றவை நாளுக்கு நாள் விலை உயர்ந்து உச்சம் தொட்டு வருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், தங்கம், வெள்ளியை விட ஒரு மரம் அதிக விலை உயர்ந்ததாக இருக்கிறது. அகர்வுட் எனப்படும் அந்த மரத்தைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
‘அக்விலாரியா’ எனப்படும் ஒரு மர இனத்தில் காணப்படும் ஒரு பிசின் மரமான அகர்வுட் உலகின் மிகவும் விலை உயர்ந்த மரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வகை மரங்கள் தெற்காசியாவின் இமயமலை அடிவாரத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவின் மலைக்காடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி வரை பல இடங்களில் காணப்படுகின்றன.
தனித்துவமான, நறுமண வாசனை கொண்ட மரமாக இது இருப்பதால் வாசனை திரவியங்கள், தூபங்கள் மற்றும் மருந்துகளில் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு வகை பூஞ்சை தொற்றால் இம்மரத்தில் ஒரு பிசின் உருவாகிறது. இந்த அரிய செயல்முறை நிகழ பல ஆண்டு காலம் ஆகும் என்பதால் அதன் நறுமணமும் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தங்கம், வெள்ளி தவிர மற்ற எந்த விலை மதிப்பற்ற உலோகத்தையும் விட அகர்வுட் மரத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இம்மரத்தின் அரிதான தன்மை மற்றும் சிறப்பு பிசின் இதை மிகவும் மதிப்பு மிக்கதாக மாற்றுகிறது. அகர்வுட் இந்தியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகின்றன.
உலகின் மிகவும் விலை உயர்ந்த வாசனை திரவியங்களில் ஒன்றாக அகர்வுட்டில் இருந்து தயாரிக்கப்படும் அவுட் வாசனை திரவியம் உள்ளது. இந்த வாசனை திரவியத்தில் உள்ள மர்மமான மற்றும் ஆழமான நறுமணம் இதை மிகவும் பிரபலமாக்குகிறது.
அகர்வுட் தூப வழிபாடு மற்றும் தியானம் மத நடைமுறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அகர்வுட் மரம் ஆயுர்வேதத்தில் பயன்படுவதோடு, செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த மரம் பயன்படுவதால் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.
அகர்வுட்டுக்கான மரங்களின் தேவை உலகில் அதிகரித்து வருவதால் இதுவே சட்டவிரோத மரம் வெட்டலுக்கு வழி வகுத்துள்ளது. இதனால் இந்த மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அகர்வுட் மரத்தின் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.