பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும்பொழுது செடிகளை கண்ணாடி கூண்டில் அடைத்து வளர்ப்பதைக் காணலாம். அப்படி வளர்ப்பதால் அவை பசுமை நிறம் மாறாமல் எப்பொழுதும் பசுமையாகக் காட்சியளிக்கிறது. இதுபோன்ற கண்ணாடி கூண்டில் கலந்துள்ள வாயுக்கள் என்னென்ன? இது ஏற்படுத்தும் விளைவு என்ன? அதனால் எப்படி உலக வெம்மை ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ புளூரோ கார்பன், ஓசோன், நீராவி மற்றும் தூசி படலம் ஆகியவை உள்ளன. இவற்றை பசுமை வீடு வாயுக்கள் என்கிறார்கள். வளி மண்டலத்தைக் கடந்து சூரிய ஆற்றல் குறுகிய அலை நீளமுடைய ஒளி ஆற்றலாக பூமியின் மேற்பரப்பை அடைகிறது. அப்பொழுது அந்த ஒளியாற்றலின் பெரும்பகுதி நீண்ட அலை நீளமுடைய ஒளியாக மாற்றப்பட்டு பூமி, சூரிய ஒளி ஆற்றலின் பெரும்பகுதியை உறிஞ்சிக் கொள்கிறது.
அப்படி உறிஞ்சப்பட்ட வெப்பத்தின் சில பகுதியை வளிமண்டலத்திற்கு திரும்ப அனுப்புகிறது. ஆனால், வளி மண்டலத்தில் உள்ள வாயுக்கள் பூமியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட வெப்பத்தை வான்வெளிக்கு அனுப்பாமல் அதனை மீண்டும் பூமியின் மேற்பரப்பிற்கே திரும்ப அனுப்பி விடுகின்றன. இதனால் அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கும் பொருந்துமாறு பூமியின் வெப்பம் 15°c முதல் 20 °c என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. இந்த தட்பவெட்ப நிலையில் தாவரங்கள் நன்றாக வளர்கின்றன. பூமியின் மேற்பரப்பு என்றும் பசுமையாகக் காட்சியளிக்கிறது. இதுவே பசுமை வீடு விளைவு என்று அழைக்கப்படுகிறது.
பசுமை வீடுகள் என்பது முற்றிலும் கண்ணாடிக் கூண்டால் அடைக்கப்பட்டு அதற்குள் பசுமையான செடிகளை வளர்ப்பதுதான். இம்முறை குளிர் பிரதேசங்களில் கையாளப்படுகிறது. இதில் சூரிய ஆற்றல் எளிதாக கண்ணாடி கூட்டிற்குள் நுழைந்து அங்கு வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது. இந்த வெப்ப ஆற்றல் கண்ணாடி வீட்டில் இருந்து வெளியேறி வளிமண்டலத்தில் சேராதபடிக்கு கண்ணாடி கூண்டின் சுவர்கள் தடுத்து விடுகின்றன. இதுபோல் கண்ணாடி கூட்டிற்குள் தக்க வைக்கப்பட்ட வெப்பத்தால் அங்குள்ள செடிகள் எல்லா பருவ காலங்களிலும் வாடாமல் வளர்ந்து பசுமை காக்கின்றன.
இதேபோல், பூமியின் மேற்பரப்பிலுள்ள வெப்பம், வளிமண்டலத்தில் உள்ள வேறுபட்ட வாயுக்களின் கூட்டு சேர்க்கையால் ஒழுங்குடன் பராமரிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளூரோ கார்பன், மீத்தேன் ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும்பொழுது பசுமை வீடு விளைவில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உலகின் வெப்பம் சராசரி அளவை காட்டிலும் அதிகரிக்கிறது. இந்நிகழ்வை உலக வெம்மை என்கிறோம். இதற்கு காரணமான வளிமண்டல வாயுக்கள் பசுமை வீடு வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இப்படி உலகம் வெம்மையாவதால் தான் பூமி கோளத்தின் சராசரி வெப்பம் அதிகரிக்கிறது. அடிக்கடி வெள்ளமும், வறட்சியும் அதிக அளவில் மாறி மாறி இருக்கிறது. வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெக்கையாலும், நீரின் மூலமும் நோய் பரப்பும் கிருமிகளால் பலவித நோய்கள் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால், மும்பையில் 2005 ஜூலை 26ல் பெய்த 944 மில்லி மீட்டர் மழையும், ஆப்பிரிக்காவில் அமேசான் நதிக்கரை பகுதிகளில் நிலவிய கடும் வறட்சியும் 1910க்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நிலவிய கடுமையான வெப்பமும் உலக வெம்மையில் குறிப்பிடத்தகுந்த வானிலை நிகழ்வுகள் ஆகும். மேலும், கடல் மட்டம் உயர்வது அதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிவது போன்ற பல்வேறு சூழல்கள் ஏற்பட உலக வெம்மை காரணமாகின்றன.
உலக வெம்மையை தடுக்கும் வழிகள் என்று பார்த்தால் பசுமை வீடு வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். அதற்கு பழைமையான புதைபடிவ பொருட்களாகிய பெட்ரோல், நிலக்கரி ஆகியவற்றிற்கு பதிலாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களாகிய சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், சாண எரிவாயு, நீராற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
விவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. அது உலக வெம்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. வெந்தயக்கீரை இந்த ஆக்சிஜனை தக்க வைப்பதற்கு ஊடுபயிராக வட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதுபோல் நைட்ரஜனை தக்க வைக்கும் பயிர்களைப் பார்த்து பயிரிடுவது சிறப்பானது. செயற்கை ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது உலக வெம்மையை குறைப்பதற்கு சிறந்த வழி.
மரங்களை நட்டு வளர்ப்பதால் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவு வெளியிடப்படுவது நிறுத்தப்படும். மரத்திற்குதான் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மை அதிகம் உண்டு.
இப்படி நம் பங்கிற்கு உலக வெம்மையை தடுக்க மேற்கூறிய வழிகளை பின்பற்றலாம்.