சுற்றுச்சூழல் பாதுகாப்பை விரும்பும் நாடுகளின் விருப்பத் தேர்வாக இருப்பது, பசுமை ஹைட்ரஜன். இது இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சி என்பதால், உலக நாடுகளின் கவனம் மெல்ல மெல்ல பசுமை ஹைட்ரஜன் பக்கமாகத் திரும்பி வருகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் மும்முரம் காட்டுகின்றன. அந்த முயற்சியில் இந்தியாவும் களமிறங்கி இருக்கிறது. அதனால் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் பற்றிய ஆய்வுகளும், தயாரிப்பு நடைமுறைகளும், பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், 'பசுமை ஹைட்ரஜன்' பற்றிய புரிதல் பெரிதாக இல்லை என்பதால், அதுபற்றிய நிறைய கேள்விகள் மக்கள் மனதில் தோன்றி மறைகின்றன. குறிப்பாக, 'பசுமை ஹைட்ரஜன்' என்றால் என்ன? அது எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? அது எரிபொருளாகப் பயன்படுமா? அப்படி பயன்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு நன்மை தருமா? என்பது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம் உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பதிவில் காண்போம்.
பசுமை ஹைட்ரஜன்: ஹைட்ரஜன் என்பது அடிப்படையில் ஒரு நிறமில்லாத வாயு. ஆனால், பச்சை, சாம்பல், நீலம் போன்ற நிறங்கள், ஹைட்ரஜன் எந்த முறையில் உற்பத்தி செய்யப் படுகிறது என்பதை வகைப்படுத்துகிறது. இதில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வழியே உற்பத்தி செய்யப்படுவதுதான் பசுமை ஹைட்ரஜன் என்று குறிப்பிடப்படுகிறது.
உற்பத்தி முறை: இதுவரை நாம் கச்சா எண்ணெய் மூலமாக தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். பெட்ரோல், டீசல் தயாரிக்கும்போதும், அதை எரிபொருளாகப் பயன்படுத்தும்போதும் மாசு அதிகளவில் வெளிப்படுகிறது. அதனால் பசுமை முயற்சிகளாக. சி.என்.ஜி. எனப்படும் 'சுருக்கப்பட்ட இயற்கை வாயு' உபயோகிப்படுகிறது. இருப்பினும் மக்களின் தேவைக்கேற்ற சி.என்.ஜி. வாயு கிடைப்பதில் சிரமம் இருப்பதால் அதற்கு மாற்றாக, மின்சார வாகனங்களை தயாரித்தனர். இருப்பினும் எலெக்ட்ரிக் கார்களை இயக்கும் மின்சார தயாரிப்பும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால், மாற்று முயற்சியாக பசுமை ஹைட்ரஜனை நம்புகிறார்கள்.
இது முழுக்க முழுக்க பசுமையான முறையில் தயாராகும் எரிபொருள். அதாவது சோலார் பேனல்கள், காற்றாலைகள் மூலமாக மின்சாரம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, அவை பிரம்மாண்ட பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. அப்படி சேமிக்கப்படும் மின்சாரத்தை தண்ணீரில் பாய்ச்சி, எலெக்ட்ரோலைசர் எனப்படும் கருவியின் துணையோடு அதிலிருந்து ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கிறார்கள். அப்படி கிடைக்கும் ஹைட்ரஜன்தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது.
பசுமை எரிபொருள்: இந்தப் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். மின்சாரமாக, பியூல்செல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொருளாக, இயல்பான வாகனத்தை இயக்கும் எரிபொருளாக, தொழிற்சாலைகளின் இயக்க ஆற்றலாக ரசாயனங்கள் தயாரிப்பில் பசுமை ரசாயனமாக என பல வழிகளில் பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்த முடியும்.
இந்தியாவின் நிலைப்பாடு: பெட்ரோல், டீசலுக்கு மூலப்பொருளான 'சுச்சா எண்ணெய்' வளத்தை கொண்டு அரேபிய தேசங்கள் பொருளாதார வளர்ச்சி கண்டதை போலவே, 'பசுமை ஹைட்ரஜன்' உற்பத்தியை இந்தியாவில் பெருக்கி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், இந்திய அரசிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, 'பசுமை ஹைட்ரஜன்' உருவாக்க திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எப்படியோ சுற்றுச்சூழல் மாசு அடையாமல் இயற்கையை காப்பாற்றினால் போதும்.