
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் சில பழங்கள் மட்டும், அழகிய வண்ணங்களால் நம்மை கவர்ந்திழுக்கும். அப்படி ஒரு பழம் தான் ஸ்ட்ராபெர்ரி என அழைக்கப்படும் செம்புற்றுப் பழங்கள். பொதுவாக ஸ்ட்ராபெர்ரி பழங்களின் விலை அதிகம் என்பதால், பலரும் குறைவான அளவிலேயே வாங்குவார்கள். ஆனால் இனி விலையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் ஸ்ட்ராபெர்ரியை வீட்டில் தொட்டியிலேயே வளர்க்க முடியும். இதற்கான வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறது இந்தப் பதிவு.
பெரிய நிலப்பரப்பில் தோட்டங்களில் வளர்க்கப்படும் ஸ்ட்ராபெர்ரியை, வீட்டில் தொட்டிலேயே வளர்க்க முடியும் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இன்று விவசாய உலகையும் மாற்றி விட்டன. அழகான மற்றும் அற்புதமான ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை வளர்க்க, ஒருசில விஷயங்களை நாம் தெரிந்து கொண்டாலே போதுமானது.
தொட்டி:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொட்டியில் வடிகால் வசதி கொண்ட துளைகள் இருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதத்தை வெறுக்கும் தாவரம் இது. தண்ணீர் அதிகமாக தேங்கினால், ஸ்ட்ராபெர்ரி வேர்கள் அழுகி விடும். ஸ்ட்ராபெர்ரியின் வேர்கள் ஆழமற்றவை என்பதால், 20 செ.மீ. ஆழம் கொண்ட தொட்டியே போதுமானது. இருப்பினும் இதன் அகலம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரே தொட்டியில் பல செடிகளை வளர்க்க ஏதுவாக இருக்கும்.
உதாரணத்திற்கு 30 செ.மீ. விட்டம் கொண்ட தொட்டியானது, 3 முதல் 4 செடிகள் வளர்வதற்கு ஏற்ற பரப்பளவைக் கொண்டிருக்கும். அகலம் அதிகமான தொட்டிகளையும் பயன்படுத்தலாம். இருப்பினும் அகலம் அதிகரித்தால், ஆழமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தொட்டியைத் தொங்க விட்டால், தண்ணீர் சொட்டு சொட்டாக கீழே ஒழுகும். இது தரையை ஈரமாக்கி விடும் என்பதால், சிறிய பைப் லைன் மூலம் தண்ணீர் வெளியேற்றத்தைக் கூட அழகாக மாற்ற முடியும்.
வளமான மண்:
உரமிடப்பட்ட பட்டை மண் ஸ்ட்ராபெர்ரி வளர்ப்பிற்கு மிகவும் ஏற்றது. இம்மண் நீரை சேமித்து வைப்பது மட்டுமின்றி, அதிகப்படியான நீரை வெளியேற்றவும் செய்யும். இந்த மண் வகையானது தோட்டக்கலைத் துறை மற்றும் பசுமை இல்லங்களில் கிடைக்கும்.
தொட்டியில் பாதியளவு மண்ணை நிரப்பி, அதனுள் ஒரு பகுதி கரி இல்லாத உரத்தை தெளிக்க வேண்டும். இப்போது ஸ்ட்ராபெர்ரி செடிகளை இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக நட வேண்டும். தினமும் தண்ணீர் வர சில நாட்களிலே பூக்கள் பூக்கத் தொடங்கி விடும். மகரந்தச் சேர்க்கை செய்கின்ற பூச்சிகளை செடிகள் ஈர்ப்பதற்காகவும், பழங்கள் முதிர்ச்சியடையவும் தொட்டிகளை மிதமான வெயில் படும் இடங்களில் தொங்க விட வேண்டும்.
அறுவடை:
ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடைக்குத் தயாராகி விடும். சில சமயங்களில் அக்டோபர் வரையிலும் நீடிக்கும். ஸ்ட்ராபெர்ரி பழச் செடிகள் பழங்களைக் கொடுப்பது மட்டுமின்றி, தனது வண்ணங்களால் வீட்டையும் அழகாக மாற்றி விடும்.