இயற்கை பொருள்கள் மீதான ஆர்வம் பொதுமக்களுக்கு தற்போது அதிகரித்துள்ளது. இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளளது மூங்கில். அதற்கேற்ப சந்தையில் மூங்கில் பொருள்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. நாளுக்கு நாள் மூங்கிலின் மவுசு கூடியதன் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க!
செயற்கையின் ஆதிக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து இருந்தாலும் கூட, இயற்கையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இதற்கு முக்கியச் சான்றாக மூங்கிலால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் அதிகம் விற்கப்படுவதைக் கூறலாம். மூங்கிலின் கடினத் தன்மையும், வளைவான உருவமும் பொதுமக்களை வெகுவாக கவர்கிறது. மூங்கில் பொருள்களின் மீது பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மூங்கிலை அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும் அல்லவா! இதைத் தான் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் இருக்கும் விவசாயிகள் செய்கின்றனர்.
பிளாஸ்டிக் மேசைகள் மற்றும் உபகரணங்களுக்கு மாற்றாக இயற்கையால் ஆன பொருள்களை மக்கள் தேடத் துவங்கி விட்டனர். இதற்கு நல்ல மாற்றாக மூங்கில் இருக்கிறது. மூங்கிலால் ஆன பொருள்களை வாங்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், நமக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இதனால் சந்தைகளில் மூங்கிலுக்கானத் தேவை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகள் மூங்கில் சாகுபடியில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.
மூங்கில் சாகுபடியில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இணையாக இந்த இரண்டு தெலுங்கு மாநிலங்களும் மூங்கில் சாகுபடியில் முன்னோக்கிச் செல்கின்றன. முன்பெல்லாம் காடுகளில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் மூங்கில் மரங்கள் இருந்து வந்தன. மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலைப் பயிராக மூங்கிலை அங்கீகரித்த பிறகு, இந்த இரு மாநிலங்களில் மட்டும் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி பயிரிடப்படுகிறது. மேலும் மூங்கிலைப் பயிரிட பலரும் முன்வர வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு சார்பில் மானியங்கள் அளித்தும் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் மாற்று பயிர் விளைவித்து வருமானத்தைப் பெருக்க நினைத்தால், அதற்கு மூங்கில் நல்ல தேர்வாக அமையும். ஆனால், மூங்கிலை வளர்ப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஏனெனில் விதைத்த ஓராண்டிலேயே மூங்கில் வளராது. மூங்கில் முதலில் தனது வேர்களை மண்ணில் நிலைநிறுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொள்வதால், மூங்கில் 5வது ஆண்டில் தான் நன்றாக வளரும். அதுவரை விவசாயிகள் பொறுமை காத்தால், அதன்பின் பலமடங்கு இலாபத்தைப் பெற முடியும். ஒருமுறை நடவு செய்யப்பட்ட மூங்கில் அடுத்த 90 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மூங்கிலில் இருந்து பெறப்படும் கூழ் கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் ஆடைகள் தயாரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. பருத்தியால் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு இணையாக மூங்கில் ஆடைகளும் பொதுமக்களிடையே விரைவில் பிரபலமாகும் என்று தெரிகிறது. தொழில்துறையிலும் மூங்கில் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
விவசாயிகளே! இந்த அளவிற்கு அதிக தேவை இருக்கும் மூங்கிலை அனைவரும் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் மூங்கிலின் தேவை இன்னமும் அதிகரிக்கும்.