

சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை ‘டைடல் போர்’ என்றும் ‘வெள்ளி டிராகன்’ என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது.
பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது.
கியான்டாங் ஆற்றில் ஏற்படும் இந்த நிகழ்வு, கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.
இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும்.
இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது.
சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது.