விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்க நினைத்தால், சந்தையில் எது மக்களால் அதிகம் வாங்கப்படுகிறதோ அதனைப் பயிரிட வேண்டும். அவ்வகையில் டிராகன் மற்றும் அவகோடா பழங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறை இப்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்க முன்வந்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
கள்ளி இனத் தாவரத்தைச் சேர்ந்த டிராகன் பழம், மெக்ஸிக்கோவைச் சேர்ந்தது என கருதப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திலும், தமிழ்நாட்டில் திண்டுக்கல்லிலும் இதன் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சந்தையில் இப்பழத்திற்கு அதிக வரவேற்பும் கிடைக்கிறது. மேலும், பழச்சாறு கடைகளில் கூட டிராகன் பழச்சாறு விற்பனையாகி வருகிறது. டிராகன் மட்டுமின்றி அவகோடா பழமும் சந்தையில் அதிகளவு விற்பனையாகிறது.
டிராகன் மற்றும் அவகோடா பழங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை கவனித்த தோட்டக்கலைத் துறை, இதன் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதன் முதல் படியாக டிராகன் மற்றும் அவகோடா பழங்களை விளைவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட இருக்கிறது. பல விவசாயிகளுக்கு இப்பழங்களின் விளைச்சல் மற்றும் வருமான வாய்ப்பு பற்றி தெரியவில்லை. ஆகையால், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது தோட்டக்கலைத் துறை.
இப்பழங்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கிறது. இருப்பினும், சந்தையில் அதிக டிமான்ட் நிலவுவதால் சாதாரண மக்கள் இப்பழங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன்படி 1 கிலோ டிராகன் பழம் ரூ.250 மற்றும்1கிலோ அவகோடா பழம் ரூ.300 முதல் 400 வரையிலும் விற்பனையாகிறது. ஆகையால் இப்பழங்களின் உற்பத்தியை அதிகரித்து விட்டால் விவசாயிகளுக்கும் நல்ல இலாபம் கிடைக்கும்; அதோடு பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் விற்கப்படும்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டங்களின் கீழாக, டிராகன் மற்றும் அவகோடா பழ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த மானியத்தில் 60% நிதியை மத்திய அரசும், 40% நிதியை மாநில அரசும் பகிர்ந்து வழங்கும். டிராகன் பழ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மானியமாக ரூ. 38,400 வழங்கப்படும். அதேபோல் அவகோடா பழ சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு மானியமாக ரூ. 5,760 வழங்கப்படும். பழ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறையை அணுகலாம்.
அதிக வருமானம் கிடைக்கும் என்றால் விவசாயிகள் ஏன் தயங்க வேண்டும்?வருமானம் கிடைப்பது மட்டுமின்றி, சாகுபடிக்கு செலவிடும் தொகையில் மானியமும் கிடைக்கிறதே! ஆர்வமுள்ள விவசாயிகள் இனியும் தாமதிக்காமல் வருமானத்தை உயர்த்த அடுத்த கட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.