
இயற்கையாகவே இலைகளில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த இலைகளில் பக்குவப்படுத்தி அளவாக உபயோகிக்க நல்ல பலன்களைப் பெறலாம்.
புளிய இலை
புளிய இலையையும், வேப்பிலையையும் சேர்த்து இடித்து நீர்விட்டு காய்ச்சி,புண்களை கழுவி வர ஆறாத புண்களும் ஆறிவிடும். புளிய இலையை நசுக்கி நீர்விட்டு, கொதிக்கவைத்து கீல் வாயு காரணமாக ஏற்பட்ட வீக்கங்களுக்கு மற்றும் புண்களுக்கு போட நல்ல குணம் கிடைக்கும்.
நறுவிலி இலை
இந்த இலையை இடித்து சாறெடுத்து முகத்தில் காணப்படும் பரு அல்லது கொப்பளங்களுக்கு தடவி வர அவை மறையத் தொடங்கும்.
நாவல் கொழுந்து இலை
இந்த இலையை ஏலம் சேர்த்து காய்ச்சி ஆட்டுப்பாலுடன் கலந்து உட்கொள்ள செரியாமல் ஏற்படும் வயிற்று உபாதை, சீதக்கழிச்சலை நீக்கும்.
நுணா இலை
இலை மற்றும் பழத்தையும் குடிநீராக்கி அருந்த பெண்களின் மாதவிடாய் போக்கை சரிசெய்யும்
நெல்லி இலை
நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தினை அரைத்து மோரில் கலந்து அருந்தி வர சீதக்கழிச்சல் குணமாகும். முடிவளர்ச்சியை அதிகரித்த செய்து கண் பார்வையை மேம்படுத்தும்.
நொச்சி இலை
இந்த இலையை சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பற்றிட தலைவலி நீங்கும். நொச்சி இலைகளை வேகவைத்து நீராவி பிடித்தால் வியர்வை உண்டாகி ஜுரம் தணியும். உடல்வலியும் நீங்கும். இந்த இலைக் குடிநீர் அனைத்து வகை ஜுரத்தையும் குணப்படுத்தும்.
பப்பாளி இலை
பப்பாளி இலைகளை இலேசாக வதக்கி பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பகங்களில் வைத்து கட்டிட பால் சுரப்பு அதிகரிக்கும்.
பவளமல்லி இலை
பவளமல்லியின் இலைக்கொழுந்தை இஞ்சிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் முதுகுவலி, காய்ச்சல் குணமாகும். பவளமல்லியின் இலைச்சாற்றை உப்பும்,தேனும் கலந்து உட்கொள்ள புழுக்கள் வெளியாகும். மலச்சிக்கலை போக்கும்.
பூவரசு இலை
இந்த இலையை அரைத்து வீக்கங்களின் மேல் கட்டலாம். தேமல் போன்ற சருமவியாதிக்கும் பற்று போடலாம்.
மருதாணி இலை
மருதாணி இலை கை சிவக்க மட்டுமன்றி உடலை குளிர்ச்சியாக்கவும் உதவுகிறது. இலையை சுத்தப்படுத்தி விட்டு குடிநீரிலிட்டு காய்ச்சி கஷாயமாக வடிகட்டி அருந்த மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.
ஓமவல்லி இலை
இலையை முகர்ந்தாலே மூக்கடைப்பு நீங்கும். புத்துணர்ச்சியை கொடுப்பதோடு நீரிலிட்டு ஆவி பிடிக்க சுவாசக் கோளாறுகளை நீங்கும். சளி, இருமலை குணப்படுத்தும்.
இதேபோல் முருங்கை, பசலை போன்ற கீரை இலைகளும் உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.