

துறவி நண்டு (Hermit crabs) என்பது பத்துக்காலி வரிசையை சேர்ந்த மெல்லுடலி ஆகும். இதில் தோராயமாக 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக துறவிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப்போல இந்த நண்டுகளும் அவை வாழும் வீட்டை அதாவது சங்கின் கூடுகளை மாற்றிக்கொண்டே இருப்பதால் இவற்றிற்கு 'துறவி நண்டு' என்றும், 'சன்னியாசி நண்டுகள்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நண்டுகள் வளர வளர தங்கள் கூட்டினையும் மாற்றிக் கொள்ளும். இவை உண்மையான நண்டுகளைவிட லாப்ஸ்டர்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. நிலத்தில் வாழும் துறவி நண்டுகள் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்பதுடன் ஈரப்பதமான சூழலில் வாழக்கூடியவை.
துறவி நண்டுகளின் முன் பகுதி தடித்த ஓடால் ஆனது. ஆனால் வயிற்றுக்கு கீழே இருக்கும் பின்பகுதி மென்மையானது. அங்கே இறுக்கமாக பற்றி கொள்ளக்கூடிய கொக்கி போன்ற ஒரு உறுப்பு உள்ளது. இவை தங்கள் உடலை எதிரிகளிடமிருந்து பாதுகாப் பதற்காக இறந்த சங்கு, நத்தை போன்றவற்றின் ஓடுகளை நாடிச்செல்கிறது.
தங்களுக்கு ஏற்ற ஓடு கிடைத்துவிட்டால் மென்மையான பகுதியை ஓட்டுக்குள் நுழைத்து, கொக்கி போன்ற உறுப்பின் மூலம் ஓட்டை இறுக்கமாக பற்றிக்கொண்டு வாழ ஆரம்பிக்கின்றன. இவற்றின் உடல் வளர்ந்தவுடன், வேறு ஒரு பெரிய ஓட்டை தேடிச் சென்று வசிக்க ஆரம்பிக்கின்றன. இந்த நண்டுகள் நத்தைகள் விட்டுச் சென்ற சங்குக் கூடுகளை தங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்கின்றன.
துறவி நண்டுகள் 32 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது. நீண்ட கொம்புகளும், நீண்டு வளர்ந்த வயிறுமுடைய இவை தங்கள் வளர்ச்சிக்கேற்றவாறு கூடுகளை தேர்ந்தெடுத்து அதற்குள் தங்கள் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள் இழுத்துக்கொள்ளும். தங்களுடைய உருவத்திற்கு ஏற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாத பொழுது எதிரிகளிடம் மாட்டிக்கொள்கின்றன.
துறவி நண்டுகள் சின்னஞ்சிறு கடல் சாமந்திகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளை பிடிக்க வரும்பொழுது கடல் சாமந்திகள் ஆடுவதை பார்த்து பயந்தோடி விடும். இந்த நண்டுகள் சாப்பிட்டுவிட்டு போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் சாமந்திகள் சாப்பிடுகின்றன. இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
துறவி நண்டுகளை 'தூய்மைப் பணியாளர்கள்' என்றும் சொல்வதுண்டு. காரணம் இவை இறந்துபோன விலங்குகளின் சதை துணுக்குகள், சிப்பிகள், கடல் தாவரங்கள் போன்றவற்றை உண்டு சுற்றுச்சூழலை சுத்தமாக்குகின்றன.
உணவு தேடுவதற்கு கண்களை விட வாசனையையே அதிகம் நம்புகின்றன. உணர்வதற்கு கூர்மையான ஆன்டனாக்களை (antennae) பயன்படுத்துகின்றன. நன்னீரும், கடல் நீரும் கலக்கும் உவர்நிலங்களில் அமைந்திருக்கும் சேற்றுப் பகுதிகளில் இவற்றை அதிகம் காணலாம். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மட்டும் 11 வகை துறவி நண்டுகள் பரவலாக காணப்படுகின்றன.