
வேலை செய்யும் போது பலருடைய சோர்வைப் போக்குவதில் டீ, காபிக்கு முக்கிய பங்குண்டு. இன்று விதவிதமான காபி பவுடர்கள் வந்துவிட்டன. ஆனால் தரத்திலும், சுவையிலும் இன்றும் தனித்துவமாய் நிற்கிறது ஆந்திரா அரக்கு காபி. இருப்பினும் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால், பலரும் அரக்கு காபியை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கூட அரக்கு காபியைப் பற்றி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். இந்தியப் பிரதமரே பாராட்டும் அளவிற்கு அரக்கு காபியில் அப்படி என்ன தனித்துவம் இருக்கிறது. வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அரக்குவேலி மலைப்பிரதேசங்களில் எண்ணற்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரக்கு நதி பகுதியில் சில்வர் ஓக் மற்றும் பலாப்பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் நிழலில் தான் அரக்கு காபியை பயிரிட்டு வருகின்றனர் பழங்குடியின மக்கள்.
அரக்கு காபியின் சுவை மற்றும் நறுமணத்திற்காகவே இது உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் வாழும் பலருக்கும் அரக்கு காபி என்றால் என்னவென்றே தெரியாது. இதனால் தான் இந்தியாவில் அரக்கு காபி அதிக பிரபலம் அடையவில்லை. இங்குள்ள பழங்குடியின மக்கள் எவ்வித இரசாயன கலப்பும் இன்றி முழுக்க முழுக்க இயற்கையான முறையில் அரக்கு காபியை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இயற்கை சூழல் நிறைந்த வளமான மண் மற்றும் அரக்கு நதி நீரால் தான் அரக்கு காபி மிகுந்த சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மரங்களுக்கு அடிப்பகுதியில் சிறு சிறு புதர்களாக அரக்கு காபி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இதன் அறுவடை காலம் டிசம்பர் முதல் ஜனவரி வரையாகும். அறுவடையின் போது பிரித்தெடுக்கப்படும் காபி பழத்தை கூழாக்கி, அதன் கொட்டைகளை பிரித்தெடுத்து பின் அதனை வறுத்து அரக்கு காபி தூள் தயாரிக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற பிரிக்ஸ் எபிக்கூர்ஸ் நிகழ்ச்சியில் அரக்கு காபிக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. 2019 இல் ஆந்திரா அரக்கு காபிக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற G20 மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகில் தலைவர்களின் பார்ட்டுகளையும் பெற்றது அரக்கு காபி.
இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த அரக்கு காபியை ஆந்திர அரசுக்குச் சொந்தமான கிரிஜன் கூட்டுறவு நிறுவனம் பழங்குடியின மக்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. பிறகு பெங்களூருவில் அமைந்துள்ள சப்பஸ் பிவிரேஜ் ஃபுட் பிரைவேட் நிறுவனம், அரக்கு காபியை விற்பனைக்கு ஏற்றவாறு உருமாற்றம் செய்கிறது.
உலகத்தரம் வாய்ந்த அரக்கு காபியை இந்தியாவில் வெறும் 4 இடங்களில் மட்டுமே அருந்த முடியும் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. விசாகப்பட்டினத்தின் விமான நிலைய வளாகம், பெங்களூருவில் அரக்கு காபி உற்பத்தி வளாகம், இந்திய நாடாளுமன்ற வளாகம் மற்றும் புதுச்சேரியில் அண்ணா நகர் ஹவுசிங் போர்டு ஆகிய 4 இடங்களில் மட்டுமே அரக்கு காபியை பருக முடியும்.
இதில், புதுச்சேரியில் கடந்த மாதம் தான் அரக்கு காபி விற்பனைத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த 4 இடங்களுக்கு என்றேனும் செல்லக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நிச்சயமாக அரக்கு காபியை சுவைத்துப் பாருங்கள்.