

பொதுவாகவே பாலைவனங்களில் வாழும் உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முற்றிலும் வித்தியாசமான பல வழிகளைக் கையாளுவது வழக்கம். வட அமெரிக்க பாலைவனங்களில் காணப்படும் கொம்பு பல்லிகள் (Horned Lizard) இந்த வரிசையில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை உலகிற்குக் கொடுத்துள்ளன.
எதிரிகளைப் பார்த்தால் உடம்பில் உள்ள முட்களை சிலிர்ப்பது, செத்தது போல நடிப்பது என பல வித்தைகளை காட்டும் இந்த பல்லிகளுக்கு இன்னொரு பிரம்மாண்டமான ஆயுதமும் இருக்கிறது. அதுதான் கண்களில் இருந்து ரத்தத்தை பீய்ச்சியடித்து எதிரிகளை ஓட விடும் டெக்னிக். கேட்பதற்கே விசித்திரமாக இருக்கும் இந்த தற்காப்பு கலை எப்படி வேலை செய்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கண்ணிலிருந்து பாயும் ரத்தம்!
ஒரு உயிரினம் தனது கண்ணில் இருந்து ரத்தத்தை வெளியேற்றுகிறது என்றால் அது ஏதோ அடிபட்டு விட்டது என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இந்த பல்லிகள் உஷாராக இந்த வேலையை செய்கின்றன. தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், இவை தலையில் இருந்து உடலுக்கு திரும்பும் ரத்த ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிடும். இதனால் கண்களுக்கு கீழே உள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி, அது வெடித்து சுமார் மூன்று அடி தூரம் வரை ரத்தம் ஸ்பீடாக வெளியே பாயும்.
இது ஏதோ தற்செயலாக நடக்கும் நிகழ்வு கிடையாது. இந்த பல்லிகள் தங்கள் எதிரியின் முகத்தை குறிவைத்து தான் இந்த ரத்தத்தை பீய்ச்சியடிக்கின்றன. இதனால் அந்த பல்லியின் கண்ணுக்கு எந்த ஒரு நிரந்தர பாதிப்பும் வராது என்பதுதான் இதில் உள்ள பெரிய ஹைலைட். இதுபோல பதினேழு நிமிடங்களில் ஒன்பது முறை ரத்தத்தை பீய்ச்சியடித்த பல்லிகள் கூட எந்த ஒரு வலியும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் வியந்து பதிவு செய்துள்ளனர்.
நாய்களை மட்டுமே தாக்கும்!
இந்த பல்லிகள் எல்லா விலங்குகளிடமும் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவது இல்லை. பறவைகள் அல்லது மற்ற எலிகள் வந்தால் இவை ரத்தத்தை பீய்ச்சியடிப்பதில்லை. நரி, ஓநாய் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகள் வேட்டையாட வந்தால் மட்டுமே இந்த ஸ்பெஷல் அட்டாக் நடக்கும். இதற்குக் காரணம் அந்த பல்லிகள் சாப்பிடும் உணவு தான்.
இவை விஷத்தன்மை கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை எறும்புகளை மட்டுமே தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவை. அந்த எறும்புகளில் உள்ள ஒருவிதமான கெமிக்கல் இந்த பல்லிகளின் ரத்தத்தில் அப்படியே கலந்துவிடும். இதனால் இந்த பல்லியின் ரத்தம் மிகவும் மோசமான ஒரு வாசனையும் சுவையும் கொண்டதாக மாறிவிடுகிறது. அந்த ரத்தம் நாய்களின் வாயில் அல்லது முகத்தில் பட்டவுடன், அந்த விசித்திரமான சுவையை தாங்க முடியாமல் அவை முகத்தை சிலுப்பிக்கொண்டு அங்கிருந்து தெறித்து ஓடிவிடும்.
பரிணாம வளர்ச்சி, எப்போதுமே ஒரு மாபெரும் ஆச்சரியம் தான். எறும்புகளை சாப்பிடும் பழக்கத்தையும், உடலின் வெப்பத்தை சீராக்கும் ஒரு சாதாரண ரத்த ஓட்ட அமைப்பையும் ஒன்றிணைத்து இப்படி ஒரு பிரம்மாண்டமான தற்காப்பு அரணை இயற்கை இந்த குட்டி பல்லிகளுக்கு கொடுத்துள்ளது.