பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?

Courtallam Waterfalls
Observe The Climatic ChangesImage Credits: Travalour
Published on

மீப காலமாகவே பருவநிலையில் நிறைய மாற்றங்களை கவனிக்க முடிகிறது. இந்த மாதத்தில்தான் வெயில் அடிக்கும், இந்த மாதத்தில்தான் மழை பெய்யும் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை. நம்மையே ஆச்சர்யப்படுத்தும்விதமாக மழை பெய்ய வேண்டிய நேரங்களில் வெயிலும், வெயில் கொளுத்தி எடுக்க வேண்டிய நேரத்தில் மழையும் என்று பருவநிலையில் எண்ணற்ற மாற்றங்களைக் காண முடிகிறது. இதுபோன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமாகும்.

மலையேற்றம் செய்வதில் தற்போது நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சோஷியல் மீடியாக்களில் காட்டப்படும் ரீல்ஸ் போன்றவற்றைப் பார்த்து மலையேற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டு புறப்பட்டு விடுகின்றனர். ஆனால், மலையேற்றம் செய்வதிலும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக, சதுரகிரி, வெள்ளியங்கிரி போன்ற சவாலான இடங்களில் மலையேற்றம் செய்யும்போது உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆன்மிக ரீதியாகச் செல்லும்போது கடவுளைக் காண வேண்டும், இறைவன் காப்பாற்றுவார் என்ற மனநிலையோடு செல்லாமல், இத்தனை மலையை நம்மால் ஏற முடியுமா? தற்போது உள்ள உடல்நிலை அதை தாக்குபிடிக்குமா? போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், தற்போது வெள்ளியங்கிரி, பர்வதமலை போன்ற மலைகளில் ஏறிய பக்தர்களின் இறப்பு என்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றம் ஏற்படும்போது அதிகமாக சுற்றுலா செல்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. மழைக்காலங்களில் அருவி, ஏரி, மலை போன்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும். நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுபோல, மலைப்பிரதேசங்களுக்கு செல்லும்போது நிலச்சரிவு போன்ற பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. சமீபத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு சரியான உதாரணமாகும். இதுபோன்ற இயற்கை மாற்றத்தை நம்மால் கணிக்க முடியாது. அதனால் முடிந்த வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லதாகும்.

தினசரி செய்திகளை கவனியுங்கள். அதில் சொல்லப்படும் வானிலை மாற்றத்தை கவனித்து அதற்கு ஏற்றாற்போல திட்டம் போட்டுக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் திட்டத்தை சற்றுத் தள்ளிப் போடுங்கள். மலையேற்றம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் சிறியதாக ஆரம்பிக்க வேண்டும். எடுத்ததுமே வெள்ளியங்கிரி போன்ற ஏழு மலைத்தொடர்களில் ஏற வேண்டும் என்று நினைப்பது கடினமாகும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வின் அர்த்தம்தான் என்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Courtallam Waterfalls

பயணம் செல்லும்போது முதலுதவிக்கான பொருட்களை கட்டாயம் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். உடல்நலம் சரியில்லாத சமயத்தில் மலையேற்றம் செய்வதைத் தவிர்க்கவும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகள் இருப்பின் மருந்துகளை கையோடு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆன்மிக ரீதியான பயணமோ அல்லது சுற்றுலாப் பயணமோ கஷ்டப்பட்டோ அல்லது உயிரைப் பணயம் வைத்தோ செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, காலநிலை மாற்றத்தை கவனித்து அதற்கு ஏற்றாற்போல உங்கள் பயணங்களை பாதுகாப்பாகத் தொடங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com