
மாமிச உண்ணிகளான விலங்குகளைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் மாமிச உண்ணிகளான தாவரங்களும் இந்தப் பூமியில் உண்டு என்பது ஒரு வியப்பான விஷயம்தான். அவை சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மாமிச உண்ணித் தாவரங்களின் செயல்பாடுகள்;
பெரும்பாலான மாமிச உண்ணித் தாவரங்கள் சதுப்பு நிலங்கள் அல்லது ஈர நிலங்களில் வளர்கின்றன. அதே சமயத்தில் சத்தான மற்றும் ஈரம் இல்லாத பாலைவன மண்ணிலும் அவை நன்றாக வளரும். இந்த தாவரங்கள் தங்கள் இரையைப் பிடிக்க பல்வேறு வகையான பொறிகளைப் பயன்படுத்துகின்றன. இவை பூச்சிகள் மற்றும் முதுகெலும்புள்ள சிறிய ஜீவராசிகளை பிடித்துத் தின்கின்றன.
ஒவ்வொரு வகையான மாமிச உண்ணித் தாவரங்களும் இரையைப் பிடிப்பதற்கும் ஜீரணிப்பதற்கும் தனித்துவமான வழிகளைப் பின்பற்றுகின்றன. இந்தத் தாவரங்களின் இலைகளில் சளி போன்ற ஒரு ஒட்டும் திரவம் உள்ளது. இதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன சில வகையான தாவரங்கள் ஆழமான துவாரங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் செரிமான திரவங்கள் நிரம்பி இருக்கும். பூச்சிகள் அங்கு வந்து சிக்கியதும் அவற்றால் அங்கிருந்து தப்பிக்க முடியாது. வீனஸ் ஃபிளைட்ராப்புகள் என்ற தாவரங்களின் முடி போன்ற பகுதியை பூச்சிகள் தொடும்போது அவற்றின் இலைகள் விரைவாக மூடி பூச்சிகளை உள்ளுக்குள் சிக்க வைத்துக்கொள்ளும்.
மாமிச உண்ணித் தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு உதவுகின்றன?
பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல்;
பூச்சிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களைப் பிடித்து உண்பதன் மூலம் அவை பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும் உதவுகின்றன.
ஊட்டச்சத்து சுழற்சி;
பூச்சிகளையும் மற்றும் பிற சிறிய உயிரினங்களையும் உண்டு ஜீரணிக்கும்போது அந்த தாவரங்கள் செழித்து வளர்கின்றன. அத்துடன் ஊட்டச்சத்து இல்லாத சூழல்களில் வளரும் தாவரங்கள் மீண்டும் அவற்றை சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் வெளியிடுவதன் மூலம் அந்த நிலத்தை ஊட்டச்சத்து மிக்கதாக ஆக்குகிறது.
நுண்வாழ்விடங்களை வழங்குதல்;
சில மாமிச உண்ணித் தாவரங்கள் சிறப்பு உயிரினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குகின்றன. பல்வேறு உயிரினங்களுக்கு தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை வழங்குவதன் மூலம் பல்லுயிரியியலை ஆதரிக்கின்றன.
ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுதல்;
இந்தத் தாவரங்களின் உடலமைப்பு பூச்சிகளைத் திறம்பட பிடிக்கும் வகையில் இயற்கையாகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. பல தாவரங்கள் தங்கள் இரையை ஈர்க்க பிரகாசமான வண்ணங்கள், தேன் போன்ற வாசனை யுடைய திரவங்களை சுரக்கின்றன. இரையைப் பிடித்த உடன், விலங்குத் திசுக்களை உடைக்க நொதிகளைச் சுரக்கின்றன. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன.
இந்தத் தாவரங்களின் இலைகள் இரையைப் பிடிக்கும் வகையில் சிக்கலான பொறி ( trap) வடிவங்களாக மாற்றி அமைக்கப்படுகின்றன.
அதிக விதைகள் உற்பத்தி;
பிற தாவரங்கள் உயிர் வாழ முடியாத சூழலிலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மண்ணிலும் இந்த வகையான தாவரங்கள் நன்கு வளரும். மேலும் அவை வளரும் சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் இந்த சத்துக்கள் பற்றாக்குறையாக இருக்கும். இந்த தாவரங்களால் அந்த குறை நீக்கப்படுகிறது. கூடுதல் ஊட்டச்சத்துக்களை பெற்று இந்த தாவரங்கள் வேகமாக வளர்வதால் அதிக விதைகள் உற்பத்தி செய்கின்றன. இதனால் அவை அதிகமாக அந்த இடங்களில் வளர்கின்றன.
சிறு உயிரினங்களுக்கு ஆதரவு;
பூச்சிகளின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிலும் நிலத்திலும் வாழும் சிறிய பாலூட்டிகள் போன்ற சிறப்பு உயிரினங்களுக்கு வாழ்விடங்களை வழங்குகின்றன. இதனால் பல்வேறு சிறு உயிரினங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
பல விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் தங்குமிடம் மற்றும் உணவுக்காக மாமிச உண்ணித் தாவரங்களை சார்ந்திருக்கின்றன. எனவே இந்த தாவரங்களை பாதுகாப்பதன் மூலம் அவை சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் வழி வகுக்கும். பரந்த பல்லுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கின்றன.