இந்தியாவின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். இந்திய மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். அதேநேரம் தற்போது கலை இழந்து வரும் விவசாயத் தொழிலை பாதுகாக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடன் திட்டத்தை இந்தியாவில் குடியுரிமை பெற்ற அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1998 ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம், ‘கிசான் கிரெடிட் திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி மையம் இணைந்து செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வட்டி இல்லா பயிர் கடன் பெற முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆதார், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தை இணைத்து சேர்த்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம். மேலும், இவ்வாறு கடன் அட்டை பெறுவோருக்கு கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும். கடன் பெறும்பொழுது நிலம், வருமானம், பயிர் முறை ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும்.
கடன் பெற்றவர்கள் அறுவடை முடிந்த பிறகு கடன் தொகையை செலுத்தினால் போதுமானது. 70 வயது வரை உள்ள விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். கடன் அட்டை பெற்ற விவசாயிகளுக்கு விபத்து காப்பீடு, திடீர் என்று ஏற்படும் மரண காப்பீடு, உடல் உறுப்பு இழப்பு காப்பீடு ஆகியவை உடன் வழங்கப்படும்.