

வீட்டில் திராட்சை வளர்ப்பு முறை என்பது ஒரு இனிமையான அனுபவம். அதை எப்படி பயிர் செய்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
திராட்சைக் கொடி படர்வதற்கு ஒரு வலுவான பந்தல் அமைப்பதும், அதற்கு சரியான மண் கலவை தயாரிப்பதும்தான் அதன் வெற்றிகரமான வளர்ச்சிக்கு அடிப்படை. அதற்கு நாம் செய்ய வேண்டியது:
சிறந்த மண் கலவை (potting mix):
செடியை நர்சரியில் இருந்து வாங்கி வந்து வைத்து விடுவது நல்லது. அப்படி வாங்கியவற்றை நடுவது எளிதாக இருக்கும்.
திராட்சையின் வேர்கள் ஆழமாக செல்லும் என்பதால் மண் தளர்வாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அதற்கு செம்மண் 40% நல்ல பிடிமானத்திற்கு ஏற்றதாக எடுத்துக்கொண்டு அதனுடன், மண்புழு உரம் அல்லது தொழு உரம் 30பர்சன்ட் ஊட்டச்சத்திற்காகவும், தென்னை நார்கழிவு (cocopeat) 20% ஈர பதத்தை தக்கவைக்கவும், மணல் 10% தண்ணீர் தேங்காமல் வடிய ஏதுவாகவும், கூடுதல் சத்து பெறுவதற்காக ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு, வேர் அழுகல் மட்டும் பூச்சிகளை இது தடுத்து நிறுத்தும் என்பதால் இவற்றை சேர்த்து மண் கலவையைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
பந்தல் அமைக்கும் முறை (Trellis setup):
திராட்சை கொடியை அப்படியே தரையில் விடக்கூடாது. அதற்கு U வடிவம் அல்லது சதுர வடிவம் கொண்ட பந்தல் அமைக்கலாம்.
உயரம்: தரையில் இருந்து அல்லது தொட்டியில் இருந்து சுமார் ஆறு முதல் ஏழு அடி உயரத்தில் பந்தல் இருப்பது அவசியம். அப்படி அமைத்தால்தான் பராமரிக்கவும், பழங்களை அறுவடை செய்யவும் வசதியாக இருக்கும்.
பொருட்கள்: இரும்பு கம்பிகள் அல்லது மூங்கில் கழிகளை பயன்படுத்தி ஒரு சட்டகத்தை உருவாக்கி அதன் மேல் நைலான் வலை அல்லது ஜிஐ (Gi கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக (கட்டம் கட்டமாக) கட்டலாம்.
தாங்குதூண்:
செடி வளர்ந்து பழங்கள் காய்க்கும்போது அதிக எடையுடன் இருக்கும் எனவே பந்தலின் தூண்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செடியை பந்தலுக்குக் கொண்டு செல்லுதல்:
செடி வளர ஆரம்பிக்கும்போது பக்கவாட்டில் கிளைகளை விடாமல் ஒரே ஒரு முதன்மை கிளையை (Main stem) மட்டும் நேராக வளர விட வேண்டும்.
ஒரு குச்சியின் உதவியுடன் செடியை பந்தல் வரை நேராகக் கொண்டு செல்லவும். அது பந்தலின் உயரத்தை எட்டியவுடன் செடியின் நுனியை கிள்ளி விடவேண்டும். இப்போது பந்தல் தளத்தில் பக்கவாட்டுக் கிளைகள் பிரியும் . அவற்றை நான்கு திசைகளிலும் படர விடவேண்டும்.
மாடித்தோட்டம் (Terrace Garden): டெரஸ் கார்டன் என்றால் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் மாடியில் வளர்க்கிறீர்கள் என்றால் சிமெண்ட் தொட்டிகளை விட பெரிய சைஸ் க்ரோ பேக் ( 24× 24 இன்ச்) அல்லது பிளாஸ்டிக் பேரல்கள் (Barrels) சிறந்தது. பந்தல் அமைக்கும்போது உங்கள் வீட்டில் தெற்கு அல்லது கிழக்கு திசையில் சூரிய ஒளி அதிக நேரம் படும் இடத்தில் அமைப்பது அதிக மகசூலைத்தரும்.
திராட்சையில் சரியான வகையை தேர்ந்தெடுத்தல்:
உங்கள் பகுதியின் காலநிலைக்கு ஏற்ற வகையை தேர்வு செய்வது அவசியம்.
பன்னீர் திராட்சை: (Muscat)
இது வளர்ப்பதற்கு எளிதானது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
தாம்சன் சீட்லெஸ்: விதையில்லாத வகை, ஆனால் இதற்கு அதிக பராமரிப்பு தேவைப்படும்.
நடவு செய்யும் முறை:
இடம் திராட்சைக்கு தினமும் 6 முதல் 8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை. தொட்டி அல்லது நிலம் தரையில் நட்டால் நல்லது. தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால் குறைந்தது 20 லிட்டர் அளவுள்ள பெரிய தொட்டியை பயன்படுத்தவும்.
நீர் மற்றும் உர மேலாண்மை தண்ணீர்:
மண் காய்ந்தவுடன் தண்ணீர் ஊற்றவும் பூப்பூக்கும் காலத்தில் மிதமான தண்ணீர் போதுமானது.
உரம்: மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது கடலை புண்ணாக்கு கரைசல் ஊற்றலாம். செடி வளரும் பருவத்தில் நைட்ரஜன் அதிகம் உள்ள உரங்களும் காய் காய்க்கும்போது பொட்டாசியம் அதிகம் உள்ள உரங்களும் தேவை.
கத்தரித்தல் (Pruning):
திராட்சையில் அறுவடை கிடைக்க கத்தரித்தல் மிக அவசியம். தேவை இல்லாத கிளைகளை அவ்வப்போது வெட்டி விடுவதால் புதிய துளிர்கள் தோன்றி பூக்கள் பூக்கும். பொதுவாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் கத்தரித்தல் செய்வது நல்லது. பூச்சி மேலாண்மை இலைகளில் பூஞ்சை காளான் தாக்கினால் வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கலாம். பறவை களிடமிருந்து பழங்களைக் காக்க வலைகளை பயன்படுத்தலாம்.
குறிப்பு; திராட்சை செடி நட்ட முதல் வருடத்தில் பழங்களை எதிர்பார்க்காமல் செடியின் வளர்ச்சியை, அது பந்தலில் படர்வதை உறுதி செய்வது எதிர்காலத்தில் அதிக மகசூல்பெற வழி வகுக்கும். இதுபோல் அன்றாடம் பராமரித்து வந்தால் கொத்து கொத்தாக திராட்சை காய்ப்பதை பறிக்கலாம். மாடியில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்ற கொடி திராட்சை கொடியே. இன்று பலரது வீடுகளின் மாடிகளை அலங்கரிப்பது திராட்சைக் கொத்துக்களே!