
நம் வீட்டிலும், வீட்டை சுற்றிலும் கரையான்கள் பரவிப் பெருகுவதைத் தடுப்பது மிக முக்கியம். அதை செய்யத் தவறினால், நம் வீட்டு மர ஜன்னல், கதவு, சட்டம், நிலைப்படி மற்றும் மரச்சாமான் அனைத்தும் நமதில்லை என்றாகிவிடும்.
அவற்றைப் புதுப்பிக்க ஆகும் செலவு கணக்கிலடங்காது. ஈரமான, ஆழமான இருண்ட பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கரையான்கள், வீட்டின் சுவற்றிலோ அல்லது ஜன்னல் கதவோரத்திலோ கட்டியிருக்கும் மண் ட்யூப் (mud tube) களை வைத்தே அவை வீட்டிற்குள் வந்திருப்பதைக்
கண்டு கொள்ளலாம். அவற்றைக் கண்டு பிடித்ததும் முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது தொழில் முறையாக பூச்சி கட்டுப்பாடு சேவை செய்வோரை தொடர்புகொள்வதுதான்.
கரையான்களைக் கட்டுப்படுத்த தொழில்முறை வல்லுனர்கள் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். முதலாவதாக கரையான் களைத்தடுக்க உதவும் இரசாயன திரவப்பொருள் ஒன்றை வீட்டைச் சுற்றிலும் உள்ள மண்ணில் கலந்துவிடுவது.
நிரந்தரமாக கரையான்கள் வீட்டிற்குள் நுழையாதிருக்க ட்ரில்லிங் மெஷின் மூலம் செங்கல் மற்றும் கான்கிரீட் ஸ்லாப்களிலும் வீட்டை சுற்றி துளையிட்டு கரையான் ஒழிப்பு இரசாயன திரவத்தை இட்டு நிரப்புவது இரண்டாவது முறை.
கரையான் ஒழிப்பு வல்லுனர்களை அழைப்பதற்குப் பதில் நாமே சில இயற்கை முறையிலான வழிகளைப் பின்பற்றலாம்.
ஆரஞ்சு ஆயில்: ஆரஞ்சு ஆயிலில் டி-லைமோனென் என்றொரு கூட்டுப்பொருள் உள்ளது. இது விஷத்தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மர சாமான் மீது இதை ஸ்பிரே பண்ணினால் கரையான்கள் செத்து மடியும்.
வினிகர் கரைசல்: வினிகர் இயற்கை முறையில் பூச்சிகளையும் கரையான்களையும் அழிக்க வல்லது. சம அளவு வினிகரையும் தண்ணீரையும் கலந்து மர சாமான்கள் மீது ஸ்பிரே செய்தும் கரையானை ஒழிக்கலாம்.
போராக்ஸ் (Borax) பவுடர்: மரத்தாலான மேஜை, நாற்காலி, அலமாரி போன்றவற்றில் கரையான் பரவலைக் கண்டு பிடித்தால், ஒரு ஸ்பூன் போராக்ஸ் பவுடரை 250 ml வெது வெதுப்பான நீரில் கலந்து அந்த சாமான்களின் மீது ஸ்பிரே செய்தால் கரையான்கள் இறந்துவிடும். போராக்ஸ் பவுடரை கையாளும்போது மாஸ்க் அணிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அப்பவுடரிலிருந்து வெளியாகும் வாயுக்கள் தீங்கிழைக்கக் கூடியவை.
சூரிய ஒளியில் வைத்தல்: கரையான்களால் பாதிப்படைந்த சாமான்களை குறைந்தபட்சம் மூன்று நாட்கள்வரை வெயிலில் போட்டு வைத்தால் கரையான்கள் செத்துவிடும். சாமான்களும் நன்கு உலர்ந்துவிடும்.
தற்காலத்தில், புதிதாய் வீடு கட்டுபவர்கள் அடித்தளம் அமைக்கும்போதே மண்ணில் பல இடங்களில் ஒரு அடி ஆழத்திற்கு துளையிட்டு அதற்குள் கரையான் கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து நிரப்பி, மேற்கொண்டு கட்டிடத்தை எழுப்பினால் வீட்டிற்குள் கரையான் வருவதற்கான வாய்ப்பே இராது.