விவசாயிகள் பயிர்களை காலநிலைக்கேற்ப பாதுகாக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு காலநிலையிலும் பயிர்கள் ஒவ்வொரு விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மழைக் காலங்களில் மழைநீர் அதிகமானால் பயிர்கள் மூழ்குவதைப் போல், கோடையில் வறட்சியினால் பயிர்கள் காய்கின்றன . இதற்கெல்லாம் தீர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் தான்.
கோடைகாலம் தொடங்கியதும், அதன் கூடவே வறட்சியும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விடும். நமக்கே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில், பயிர்களுக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதனை சமாளிக்கவும், கோடைகாலப் பயிர்களைக் காப்பாற்றவும் விவசாயிகள் பல முயற்சிகள் எடுப்பதுண்டு. ஆனால், அம்முயற்சிகள் சிலநேரம் மட்டுமே கைகூடுகின்றன. வறட்சியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், பயிர்கள் கருகி மகசூல் வெகுவாக பாதிக்கும். இதனால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
வறட்சி மேலாண்மைத் தொழில்நுட்பம்:
பயிர்களைக் காக்க விவசாயிகள் வறட்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்களை கையாள வேண்டும். இதன்படி ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 20 கிராம் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்தை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கரைசலை பூக்கின்ற பருவம் மற்றும் தானியங்கள் உருவாகின்ற பருவத்தில் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். மேலும் கரும்பு மற்றும் சோளத் தோகைகளை நிலப் போர்வையாகவும் பயன்படுத்தலாம். இவற்றைச் செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படும். மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருந்தாலே வறட்சியைத் தடுத்து, பயிர்களையும் பாதுகாத்து விடலாம். இருப்பினும், ஈரப்பதத்தைத் தக்க வைக்க விவசாயிகள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பருத்தியை விதைத்த பிறகு, 45 மற்றும் 60 நாட்கள் கழித்து நைட்ரஜன் உரத்தை இடலாம். இதுதவிர வறட்சியில் இருந்து பருத்திப் பயிர்களைப் பாதுகாக்க உயிரி உரங்களையும் பயன்படுத்தலாம். பருத்தியில் விதைகளைக் கடினப்படுத்துவதன் மூலமாகவும் வறட்சியைத் தடுக்கலாம். மேலும், 15 மற்றும் 20வது கணுப்பகுதிக்கு மேலே இருக்கும் பகுதியை கத்தரித்து விடுவதன் மூலமாக நீராவிப் போக்கைத் தடுக்க முடியும். இப்படிச் செய்வதால் பருத்திப் பயிர்கள் வறட்சியில் இருந்து தப்பித்து விடும்.
கோடை காலங்களில் பயிர்களுக்கு விடியற்காலையில் தண்ணீர்ப் பாய்ச்சுவது நல்ல பலனைத் தரும். இப்படிச் செய்வதால் மண்ணில் வெகுநேரத்திற்கு ஈரப்பதம் நிலைநிறுத்தப்படும். வறட்சி மேலாண்மையை கையாள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தண்ணீர் மேலாண்மையும் முக்கியம். இப்போது பல விவசாயிகள் போர் மூலமே தண்ணீர்ப் பாய்ச்சுகிறார்கள். சில இடங்களில் பழைய கிணறுகள் தூர்வாரப்படாமல் வீணாக அப்படியே கிடக்கிறது. கிணறுகளை முறையாகத் தூர்வாரிப் பயன்படுத்தினால் தண்ணீர்ப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். இதன் மூலம் வறட்சியையும் தடுக்க முடியும்.
விவசாயிகளுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டுமானாலோ அருகில் இருக்கும் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவார்கள்.