வண்ணங்களால் நம்மை ஈர்க்கும் தன்மை கொண்ட பூக்களில் செம்பருத்திக்குத் தனியிடம் உண்டு. தோட்டக்கலைத் துறையில் விவசாயிகள் பலரும் செம்பருத்தியை விரும்பி வளர்ப்பார்கள். மற்ற பூச்செடிகளைக் காட்டிலும் செம்பருத்திக்கு அதிக பராமரிப்புத் தேவைப்படும். ஏனெனில் வேர் அழுகல் நோய் இந்தப் பூச்செடிகளை மிக எளிதாகத் தாக்கி விடும். ஆகையால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்.
முழு சூரிய ஒளியில் செம்பருத்தி செடிகள் நன்றாக செழித்து வளரும். ஆகையால் குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை சூரிய ஒளி படும்படி செடிகளை வளர்ப்பது அவசியம். 15° செல்சியஸ் முதல் 32° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை செம்பருத்தி செடிகளுக்கு உகந்தது. செம்பருத்தி செடிகள் வளர்க்கும் மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், நிலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தண்ணீர் தேங்கி விட்டால் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு, அது செடியைப் பாதிக்கும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சும் போது, வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்யுங்கள்.
பூச்சி மேலாண்மை: செம்பருத்தி செடிகளில் மாவுப்பூச்சிகள், அஃபிட்ஸ் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் அல்லது பூச்சிக்கொல்லி சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். செடிகளைச் சுற்றிலும் நல்ல காற்றோட்டமான சூழல் இருந்தால், பூச்சித் தாக்குதல் வெகுவாக குறையும். நுண்துகள் பூஞ்சைக் காளான் மற்றும் இலைப்புள்ளி போன்ற பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்த பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
உரமிடுதல்: செடிகள் வளர்கின்ற பருவத்தில் தொடர்ந்து உரமிடுவது நல்லது. நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை சம அளவில் கலந்து உரமிடலாம். குளிர்காலங்களில் செடிகள் செயலற்ற நிலையில் இருந்தால், உரமிடக் கூடாது.
தழைக்கூளம் அமைத்தல்: மண்ணில் ஈரத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும், மண்ணின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் அடிப்பகுதியில் தழைக்கூளம் அமைக்க வேண்டும். வைக்கோல், மரச் சில்லுகள் மற்றும் சிறுசிறு பட்டைகளைக் கொண்டு தழைக்கூளத்தை அமைக்கலாம்.
கத்தரித்தல்: செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க அவ்வப்போது தேவையற்ற காய்ந்த இலைகளை கத்தரிக்க வேண்டும். மேலும் இப்படிச் செய்து செடிகளின் வடிவத்தையும் நம்மால் அழகாக மாற்ற முடியும். செடியில் புதிய மொட்டு அல்லது தண்டின் வளர்ச்சி வெளிப்படுவதற்கு முன்பே கத்தரிப்பது நல்லது.
குளிர்கால பராமரிப்பு: குளிர் காலங்களில் பனி அதிகளவில் விழும் என்பதால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகையால், உறைபனி போர்வைகளைப் பயன்படுத்தி செம்பருத்தி செடிகளைப் பாதுகாக்கலாம். செம்பருத்தியில் பல வகைகள் இருப்பதால், பூக்கள் எந்த வகையான நிறம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பூச்சசெடிகளைப் பொறுத்தவரையில் பலருக்கும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லையெனில் செடிகளை வளர்ப்பது வீண் தான். ஆகையால் ஆர்வம் மட்டுமின்றி பொறுப்புணர்வோடும் செடிகளை வளர்க்க வேண்டும்.