பூச்சி மேலாண்மைக்கு உதவும் முத்தான மூன்று கரைசல்கள்!

Pest control
Pest management
Published on

விவசாயப் பயிர்களில் மகசூலை அதிகரிப்பத்தற்கு பூச்சித் தாக்குதலையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பயிர்களில் சேதம் ஏற்பட்டு மகசூல் குறைந்து விடும். இயற்கையான முறையில் முத்தான மூன்று கரைசல்களின் மூலம் பூச்சி மேலாண்மையை எப்படி கையாள்வது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

பயிர் விளைச்சலில் பூச்சிகள் தான் விவசாயிகளை அதிகமாக அச்சுறுத்துகின்றன. இந்தப் பூச்சித் தாக்குதல் மற்றும் நோய் மேலாண்மைக்கு நம்மைச் சுற்றிக் கிடக்கும் பொருள்களே உதவுகின்றன. இயற்கையாக கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவதன் செயற்கை பூச்சி விரட்டிகளை நம்மால் குறைக்க முடியும்‌. இதன்மூலம் நிலம் மாசுபடுவதையும் குறைக்க முடியும். இவ்வரிசையில் மூன்று முக்கிய கரைசல்கள் உள்ளன.

வேப்பங்கொட்டைக் கரைசல்:

கிராமங்களில் வேப்ப மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. ஆகையால் வேப்பங்கொட்டை மிக எளிதாகவே கிடைக்கும். 5 கிலோ வேப்பங்கொட்டைகளை எடுத்து, நன்றாக அரைத்து மாவாக்கி கொள்ள வேண்டும்‌. இதனை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் மரத்தால் செய்யப்பட்ட கரண்டியைக் கொண்டு, பால் நிறத்தில் வரும் வரை இதனைக் கலக்க வேண்டும். பின்பு இந்தக் கரைசலை வடிகட்டி, இதனுடன் 50 கிராம் காதி சோப்பை சேர்த்து கலக்கினால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இந்த கரைசலை பயிர்களின் மீது தெளித்தால் பூச்சித் தாக்குதல் வெகுவாக குறையும்.

ஆமணக்கு கோல்டு:

கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஆமணக்கு கோல்டு. ஒரு ஏக்கருக்கு 200 மிலி வரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இது ஏற்றது எனவும் பரிந்துரைப்பட்டுள்ளது. இதனை 2 முறை இலை வழியாக பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 100 மிலி ஆமணக்கு கோல்டை கலந்து பயன்படுத்த வேண்டும். நடவுக்கு பின் 25 நாள்கள் கழித்து ஒரு தடவையும், 50 நாட்கள் கழித்து இரண்டாவது தடவையும் தெளிக்கலாம்.

ஆமணக்கு கோல்டைப் பயன்படுத்துவதன் மூலம் பூச்சித் தாக்குதல் குறைவதோடு, 29% வரை மகசூலூம் அதிகரிக்கிறது. மேலும் 95% பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரத்து, விதை உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
அதிக மகசூல் பெற இந்த 4 வகையான மண்களின் தன்மையை தெரிந்து கொள்வோமா?
Pest control

இளநீர் - மோர் கரைசல்:

ஒரு வாளியில் 1 லிட்டர் அளவுக்கு இளநீரை ஊற்றி, அதில் 5 லிட்டர் மோரைக் கலக்க வேண்டும்‌. பிறகு பழக் கழிவுகளில் இருந்து பெறப்பட்ட பழச்சாற்றினை இதில் கலக்க வேண்டும். இப்போது ஒரு நைலான் துணியில் சிறிதளவு தேங்காய் துண்டுகளை கட்டி, கரைசலில் மூழ்குமாறு தொங்க விட வேண்டும். ஏழு நாட்கள் கழித்து இந்தக் கரைசல் நன்றாக புளித்து விடும்.

10 லிட்டர் தண்ணீரில் 300 முதல் 500 மிலி இளநீர் மோர் கரைசலைக் கலந்து பயிர்களின் மீது தெளிக்கலாம்‌. மேலும் ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 லிட்டர் என்ற அளவில் பாசன நீரிலும் கலந்து, பயிர்களுக்கு அளிக்கலாம். தாவர வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் இளநீர் மோர் கரைசல், பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. மேலும் பயிர்களின் பூக்கும் திறனையும் அதிகரிக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com