

வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பது என்பது ஒரு கலை. தோட்டத்தில் உள்ள செடிகளில் காய்கறிகள் அபரிமிதமாக விளைய உரத்தை பயன்படுத்துகிறோம். அதிலும் புண்ணாக்கு உரத்தை 20 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாற்றும் சரியான முறை குறித்து இப்பதிவில் காண்போம்.
கடுகு புண்ணாக்கு உரம் (Mustard Cake Fertilizer) தோட்டச் செடிகளுக்கு சிறந்த உரமாகும் .இதில் 3 : 2 : 1 என்ற விகிதத்தில் NPK நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் இருப்பதோடு, அமினோ அமிலங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் (Micronutrients) மற்றும் கொழுப்பு அமிலங்கள் (Fatty Acids) நிறைந்துள்ளன. ஆனால், இந்த உரத்தை தயாரிக்கும் முறையில் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் இதைத் தயாரித்துப் பயன்படுத்தினால் 20 மடங்கு பலன் அதிகம் கிடைக்கும்.
புண்ணாக்கு கரைசல்: 10 லிட்டர் கடுகு புண்ணாக்கு உரம் தயாரிக்க, முதலில் ஒரு மண் பானையை எடுத்துக்கொண்டு அதில் 50 கிராம் புண்ணாக்கை 2 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். இதனை நான்கு நாட்களுக்கு தினமும் கிளறி நொதிக்க விட வேண்டும்.
ரகசியம்: தனியாக ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் டி.ஏ.பி. (DAP)ஐ 15 கிராம் எடுத்துக்கொண்டு அதை 500 ml தண்ணீரில் தனியாகக் கரைத்து அதனை நான்கு நாட்கள் ஊற விடவும். DAPயால் புண்ணாக்கில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்கிறோம்.
சமநிலை அவசியம்: இரண்டு கரைசல்களும் நான்கு நாட்களுக்கு பிறகு தயாராக இருக்கும். உரம் கெட்டியாக இருந்தால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனை தவிர்க்க நன்றாக நீரில் கலக்க வேண்டும். 10 லிட்டர் உரம் தயாரிக்க, புண்ணாக்குக் கரைசலில் இருந்து 2 லிட்டர் மற்றும் DAP கரைசலில் இருந்து அரை லிட்டர் (0.5 லிட்டர்) எடுத்துக்கொள்ளவும்.
மூன்று லிட்டர் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கொண்டு அதில் 2.5 லிட்டர் கரைசலை சேர்க்கவும். மொத்தம் 5.5 லிட்டர் கரைசல் இப்போது இருக்கும். மீதமுள்ள 4.5 லிட்டர் தண்ணீரைச் சேர்த்து, மொத்த கரைசலை 10 லிட்டராக மாற்றவும். உரம் கெட்டியாக இருந்தால் அது செடிகளுக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்பதால் சரியாக 10 லிட்டருக்கு நீர்ப்பது மிகவும் அவசியமாகும்.
பயன்படுத்தும் முறை: ஒவ்வொரு செடிக்கும் உரத்தை நன்றாகக் கிளறிய பிறகு 50m.l. ஊற்றினால் போதுமானது. இந்த உரத்தை சக்குலன்ட் (Succulent) அல்லது காக்டஸ் (Cactus) போன்ற சதைப்பற்றுள்ள செடி தாவரங்களுக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. மேலும், இந்த திரவ உரத்தை மண்ணில் மட்டும்தான் ஊற்ற வேண்டும். நேரடியாக இலைகள் அல்லது தண்டுகள் மீது ஊற்றக் கூடாது.
இந்த உரத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த மிக சிறந்த பலன் கிடைக்கும். ஏனெனில், இது ஒரு மெதுவாக ஊட்டச்சத்தை (Slow-release) வெளியிடும் உரம் ஆகும்.