

தேன் சிட்டு (Hummingbird) என்னும் ஒரு சிறிய பறவை மற்றும் தேனீக்கள் போன்ற உயிரினங்கள் பூக்களில் உள்ள தேனை குடிப்பதும், மகரந்த சேர்க்கைக்கு உதவுவதும் வழக்கமான ஒன்று.
அப்படி அவை குடிக்கும் தேனில் எத்தனால் இருப்பதாக உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோதனைக்கு எடுத்துக்கொண்ட 26 வகைச் செடிகளில் ஒரு சாம்பிள் பூவை எடுத்து ஆராய்ந்தபோது அதில் எத்தனால் நூலிழை போல் இருந்துள்ளது. மாதிரிக்கு எடுத்த தேனின் எடையில் 0.056% எத்தனால் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேனில் இயற்கையாக உள்ள சர்க்கரையில் ஈஸ்ட் வினைபுரிந்து அதை புளிக்கச் செய்துள்ளது. அதனால் உண்டானதே அந்த எத்தனால் என்று கூறப்படுகிறது. மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் முக்கிய உணவு தேன்.
தேன்சிட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அதன் உடல் எடையில் 50% - 150% தேனை அது ஒரு நாளில் உணவாக உட்கொள்கிறது. உணவுப் பழக்கங்களின் அடிப்படையில், பஸிபிக் கடற்கரை பகுதிகளில் காணப்படும் அன்னாஸ் ஹம்மிங் பேர்ட்,
அதன் ஒவ்வொரு கிராம் உடல் எடைக்கும் 0.2 கிராம் அளவு எத்தனாலை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கின்றனர். சோதனைக்காக, கார்டனில் ஒரு பௌலில் 1% ஆல்கஹால் கலந்திருக்கும் சுகர் சிரப்பையும், மற்றொன்றில் 1% க்கும் மேலாக 2% வரை ஆல்கஹால் கலந்துள்ள சுகர் சிரப்பையும் விஞ்ஞானிகள் வைத்தனர். 1% ஆல்கஹால் கலந்துள்ள சிரப்பை குடிக்க ஹம்மிங் பேர்ட்ஸ் ஆர்வம் காட்டுகின்றன என்றும், அதற்கு மேல் அந்த சிரப்பில் 2% வரை ஆல்கஹால் கலந்திருக்குமானால் அதன் அருகில் கூட அவை வர மறுத்துவிடுகின்றன என்றும் ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
அதாவது, ஆல்கஹால் எடுத்துக்கொள்ள ஒரு வரையறையையும் அவை வகுத்து வைத்திருப்பது தெரிகிறது. தேனில் கலந்திருக்கும் பிற கூட்டுப் பொருட்களான காஃபின் மற்றும் நிக்கோடின் போன்றவை இம்மாதிரியான உயிரினங்களின் நடத்தையில் ஓரளவு பாதிப்பை உண்டுபண்ணுகின்றன. ஆனால் எத்தனால் உண்டாக்கும் பாதிப்பு அதைவிடக் குறைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஹம்மிங் பேர்டின் உடல் எரியடுப்பு போன்றது. அது உட்கொள்ளும் அனைத்தும் வெகுவிரைவில் சக்தியாக மாறி எரிக்கப்பட்டுவிடும்.
அதனால் அதன் இரத்தத்தில் எந்த போதைப் பொருளும் கலந்திருக்க வாய்ப்பிருப்பதில்லை. ஆனாலும், போதை மனிதர்களிடம் காணப்படும் ஒரு வகையான பரபரப்பு அதனிடம் இருப்பதை காணமுடிகிறது. மனிதர்கள் மது மயக்கத்தில் விழுந்து கிடப்பதுபோல் தேன் சிட்டு ஒருபோதும் தன்னிலை மறந்து விழுவதில்லை. பின் எதற்காக அதை அருந்தவேண்டும் என்ற ஆவல் தூண்டப்படுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆல்கஹால் அருந்துவதை அவை விரும்புவதில்லை என்றாலும் அவை குடிக்கும் தேனில் பரவலாக ஆல்கஹால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எத்தனால் (மது) உடலில் சிதைவடைந்த பிறகு உருவாகும் துணைச் சேர்மமான (metabolic by-product of ethanol) 'எத்தில் குளுகுரோனைடு' (ethyl glucuronide) என்ற துணை பொருள் அன்னாஸ் ஹம்மிங் பேர்ட் உள்ளிட்ட பல பறவைகளின் இறகுகளில் காணப்பட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உண்ணப்படும் ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்திற்கும் உள்ளாவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், முற்காலத்திலேயே விலங்குகள் மற்றும் நம் முன்னோர்கள் உள்ளிட்ட பலவகை இனங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, ஆல்கஹால் அருந்துவதால் உண்டாகும் விளைவுகளுக்கு பழக்கமாகி விட்டனர் என்பதை தெளிவாக்குகிறது.
தேனை உட்கொள்ளும் அனைத்து வகை உயிரினங்களின் புள்ளி விவரம் ஆய்விற்கு கிடைக்காததால், விஞ்ஞானிகள், பறவைகள் உட்கொள்ளும் தேனின் அளவை மற்ற தேன் குடிக்கும் விலங்குகள் அருந்தும் தேனின் அளவோடு ஒப்பீடு செய்யவும், அமெரிக்காவின் அன்னாஸ் ஹம்மிங் பேர்ட் அருந்தும் ஆல்கஹால் அளவை ஆப்பிரிக்காவில் காணப்படும், அதே இனத்தை சேர்ந்த மூன்று வெவ்வேறு வகையான சன்பேர்ட்ஸ்களுடன் ஒப்பீடு செய்யவும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.