மரப்பயிர்கள் காப்பீட்டு திட்டத்தால் ஏற்படும் நன்மைகள்!

Agroforestry project
Agroforestry project
Published on

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் பெருகிவிட்டதால் அதற்கான மரத்தேவையை பூர்த்தி செய்ய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தை அரசு ஊக்கப்படுத்தியது. இயற்கை சீற்றத்தால் மரங்கள் விழும்போது விவசாயிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகினர். எதிர்காலத்தில் விவசாயிகள் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடாமல் தடுக்க இந்தியா காப்பீட்டு திட்டத்தை ஏற்படுத்தியது. அதன் குறிக்கோள்கள் என்ன? அதனால் அடையும் நன்மைகள் என்ன? என்பதை இப்பதிவில் காணலாம். 

நாட்டின் மரத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வேளாண் காடுகள் வளர்ப்பதால் மட்டுமே முடியும். எனினும் வேளாண் காடுகள் அதிக அளவில் விரிவாக்கம் செய்ய இயலாமல் போனதற்கு அவை வேகமாக வளர்ந்து குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய மர ரகங்கள் இல்லாததும், வளர்ந்த மரங்களை தடை இல்லாமல் உரிய காலத்தில் விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு உரிய பயனளிக்க கூடிய ஒரு வணிக முறை இல்லாததும்தான் என உணரப்பட்டது. 

இந்தக் குறையை போக்குவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அங்கமான மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய மரங்களின் புதிய ரகங்களான தைல மரம், சவுக்கு மற்றும் மலைவேம்பு ஆகியவற்றை உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளது. மேலும் தீக்குச்சி மரங்கள், எரிசக்தி உற்பத்திக்கு தேவையான மரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட இனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்த மரங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளப்பதற்காக காகிதம், தீக்குச்சி, ஒட்டுப்பலகை, உயிரி எரிசக்தி தொழிற்சாலைகளுடன் இணைந்து விவசாயிகள் மத்தியில் ஒப்பந்த முறை மரம் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து உலக வங்கி மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவி உடன் தொடங்கப்பட்ட மரங்கள் தொடர்பான' மதிப்பு கூட்டு சங்கிலி திட்டத்தை' வனக்கல்லூரி ஆறு ஆண்டுகளாக நடத்தி வந்தது.

இத்திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயிகள், மரம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டதால் தமிழகத்தில் வேளாண் காடுகளின் அளவு பெருமளவு அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 29 மாவட்டங்களில் சுமார் 50,000 ஹெக்டேருக்கும் மேல் வேளாண்காடுகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு மரத்தொழிற்சாலைகள் குறைந்தபட்ச விலையை உடனுக்குடன் பட்டுவாடா செய்வதாலும், குறுகிய காலத்தில் மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடுவதாலும், பல விவசாயிகள் வேளாண் காடுகள் வளர்ப்பை ஆதரிக்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
ஒட்டகச்சிவிங்கிகளை பாதுகாப்பதன் அவசியம் அறிவோம்!
Agroforestry project

2010ல் ஏற்பட்ட தானே புயலில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சவுக்கு மரங்கள் சேதம் ஆகிவிட்டன. இதில் முறிந்து விழுந்த மரங்களின் எடை 7 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருந்தது. மீண்டும் வயலை சீர் திருத்திபுதிதாக மரங்களை நட முடியாமல் சிரமப்பட்டனர்.

எதிர்காலத்தில் விவசாயிகள் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடாமல் தடுக்க வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமும் இணைந்து நாட்டிலேயே முதன்முறையாக புதியதொரு வேளாண் காடுகள் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கி உள்ளனர். 

இத்திட்டத்தின் கீழ் சவுக்கு, தைலம், மலைவேம்பு, பெரும் மரம். குமிழ், சுபாபுல் மற்றும் சிசு ஆகிய ஏழு வகையான மரங்களை காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தை முதலீட்டு அளவில் 125 சதவிகிதத்தை பிரீமியம் தொகையாக செலுத்திவிட்டால் மரங்களுக்கு காட்டுத் தீ, மின்னல், கலவரம், புயல் காற்று, வெள்ளம் போன்றவற்றில் ஏதாவது ஒரு காரணத்தால் மரங்களுக்கு சேதம் ஏற்பட்டால் முழு முதலீட்டுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் விவசாயிக்கு வழங்கும். இந்த பிரிமியர் தொகை ஒரு ஏக்கருக்கும் 300 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை மரங்களுக்கு தக்க மாறுபடும். தேக்கு, செஞ்சந்தனம், வேங்கை மற்றும் சந்தனம் போன்ற மரங்களுக்கு காப்பீடு செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை மட்டும் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கும் ,வறட்சியால் அழியும் மரங்களை காப்பீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவதற்கும் மற்றும் ஒரு விவசாயினுடைய காப்பீடு செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டாலும், அதற்கான நஷ்ட ஈட்டினை வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் வரும் காலங்களில் மரக் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறி வரும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் பயங்கரம்!
Agroforestry project

இத்திட்டம் வேளாண்காடுகள் வளர்ப்பை மேம்படுத்துவதுடன், விவசாயிகள் தடையில்லா உறுதியான வருமானத்தை பெற உதவுவதோடு, தமிழகத்தில் உள்ள மர தொழிற்சாலைகளுக்கு சிறந்த தரமுடைய மூலப் பொருட்களை தொடர்ந்து கிடைக்க செய்யும் என்பது உறுதி. அதிக அளவில் மரங்களை விவசாயிகள் வளர்ப்பதால் காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, இயற்கை காடுகள் அழியாமலும் பாதுகாக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com