

ஐரோப்பாவின் தென் மற்குப் பகுதியில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளின் குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வாழ்ந்து வரும் ஒரு விசித்திரமான விலங்கு ஐபீரியன் ரிப்ப்ட் நியூட் (Iberian ribbed Newt).
இதன் அறிவியல் பெயர் Pleurodeles Waltl ஆகும். இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. எதிரிகளை விரட்டியடிக்க இது கையாளும் வழிமுறைகளால் 'ரியல் லைப் Wolverine' (அசுர வீரன்) என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. தமக்குத் தீங்கிழைக்க வரும் பிற விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள சில பறவைகள் மற்றும் விலங்குகள் தங்களின் நிறம் மற்றும் உருவங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கும்.
இந்த ஐபீரியன் ரிப்ப்ட் நியூட், தன்னைப் பிடித்து உணவாக்கிக் கொள்ள வரும், அளவில் பெரிய விலங்குகளை விரட்டி அடிக்கும் விதமே தனி!
இதன் உடல் அமைப்பு நீளமாகவும் சற்று தட்டையாகவும் இருக்கும். ஆபத்து நேரங்களில், தனித்துவமான முறையில் இது தன் எலும்புக் கூட்டை நகரச் செய்யும். அப்போது அதன் விலா எலும்புக் கூடு சுமார் 50° அளவுக்கு முன்னோக்கி விரிந்து சுழலும். அதனால் உடலுக்குள் உண்டாகும் அழுத்தத்தில், எலும்புகளின் கூர் முனைகளானது தோலுக்கு அருகில் உள்ள பக்கவாட்டு சதையை துளைத்துக்கொண்டு வெளிவரும். அதேநேரம் அங்குள்ள தோல் மீது வளர்ந்திருக்கும் சிறிய பாலுண்ணி போன்ற மருக்கள் உற்பத்தி செய்யும் கொடிய, பால் போன்ற வெள்ளை நிறமுடைய விஷம் வெளிவந்து எலும்புகள் மீது பரவிவிடும்.
இதைப் பிடிக்க வரும் மற்ற விலங்குகள் மீது இந்த விஷம் பட்டவுடன், தாங்க முடியாத வலி உண்டாகும். உடனே எதிரிகள் அந்த இடத்தைவிட்டே ஓடி விடும். அப்படியும் இந்த ரிப்ப்ட் நியூட்டை சாப்பிட்டே ஆக வேண்டுமென முயற்சி செய்யும் எதிரியின் உள்ளுறுப்புகள் ரண களமாகிவிடும் அல்லது வாய்க்குள் கொண்டு சென்ற நியூட்டை வாந்தி எடுத்துவிட்டு அது ஓடி மறைந்துவிடும். அடுத்த முறை ரிப்ப்ட் நியூட்கள் இருக்கும் பக்கம் எதிரிகள் தலை காட்டவே அஞ்சும்.
ஐபீரியன் ரிப்ப்ட் நியூட், தனக்குத்தானே உடல் மீது உண்டாக்கிக் கொண்ட காயங்கள் நிமிடத்தில் குணமாகி விடுவதுடன் அந்த இடத்தில் எந்தவித தழும்பும் தென்படுவதில்லை. மேலும், இந்த விலங்கின் கால்கள், வால், திசுக்கள், சதைகள், தோல் மற்றும் முக்கிய உள்ளுறுப்புகளில் எந்தவிதமான சிதைவு ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் மீளுருவு பெற்றுவிடுகின்றன. ரிப்ப்ட் நியூட்டின் உடல் உறுப்புகள் மீளுருவாக்கம் (regeneration) பெற எவ்விதமான மரபணுக்கள் மற்றும் செல்களின் செயல்பாடுகள் உதவி புரிகின்றன என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். முயற்சியில் வெற்றி பெற்றால் அதே முறையை மனிதர்களுக்கு அளிக்கும் மருத்துவ சிகிச்சையிலும் பின்பற்றி பயன் பெறலாமே என்ற இலக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
தனித்துவமான இந்த உயிரியல் 'சுவிட்ச் பிளேடு' (Switchblade) அம்சமானது மிகவும் விசித்திரமானது. பூமியில் உயிர் வாழ்வதற்காக விலங்கினங்கள் உண்டாக்கிக் கொண்ட, தற்காப்பு கவசங்களின் பரிணாம வளர்ச்சி எனவும் இதைக் கூறலாம்.
மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் ஆக்கிரமிப்பு, அதனால் உண்டாகும் வாழ்வாதார இழப்பு ஆகிய காரணங்களால் ஐபீரியன் ரிப்ப்ட் நியூட்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக
கூறப்படுகிறது. அழிவின் விளிம்பிற்கு சென்றுவிடாமல் இந்த விசித்திரமான விலங்குகளை பாதுகாப்பது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும்.