திருச்செந்தூரில் உலகப் புகழ் பெற்ற சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்ற சுவடு காய்வதற்குள், செந்தூரான் கோயில் யானை தெய்வானை, பாகனையும், மற்றவரையும் தாக்கியது பெரும் பேசு பொருளாகியிருக்கிறது! பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். மதம் பிடித்ததாக சிலர் கூற, யானையைப்பற்றித் தெளிவாக அறிந்தவர்கள் ’பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது!’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்! (பெயரை வைத்துப் பார்க்கையில் அது பெண் யானை என்றே தோன்றுகிறது.)
இன்னும் சிலரோ, அதிகாலையிலேயே யானையிடம் சென்றவர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் அது மிரண்டு தாக்கியதாகக் கூறுகிறார்கள்! யானைகளைப் பற்றி ஆய்வு செய்பவர்களும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறார்கள்.
பல வருடங்கள் பழகிய பாகன்கள்கூட ஒவ்வொரு காலையும் யானையை அணுகுகையில், அதன் மூட் அறிந்த பிறகே அருகில் செல்ல வேண்டுமாம்! பழகிய நண்பர்களின் அலுவலகத்துக்குச் சென்றால் கூட எப்படி நாம் ‘மே ஐ கம் இன்’ என்று கேட்டு, வாசலில் நின்று, அவரிடமிருந்து ‘எஸ்’ வந்ததுந்தானே உள்ளே செல்கிறோம். அதுபோலவே பாகன்களும் நடந்து கொள்ள வேண்டுமாம்!
நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரிய உருவம் கொண்டது யானை! மிகுந்த பலம் பொருந்தியதுங்கூட! காட்டுக்கே அரசன் சிங்கம் என்றாலுங்கூட, அவை கூட்டமாக வந்தே யானையை எதிர்க்குமாம்! பலம் கொண்டது என்றாலும், பசிக்கு இது சாப்பிடுவது தாவர உணவை மட்டுமே. குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இது, சமீப காலங்களில் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து விடுகிறது! ஞாபக சக்தி மற்றும் வாசனைகளை உணரும் திறன் இவற்றுக்கு மிக அதிகமாம்!
ஒரு யானையின் எடை, 4 டன்னிலிருந்து 6 டன் வரை இருக்குமாம். மனிதர்களுக்கு அடுத்தபடியாக நிலத்தில் அதிக நாட்கள் வாழும் விலங்கு யானைதானாம்! சராசரி வயது 70 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கர்ப்பகாலம் 22 மாதங்கள். யானையின் செரிமானம் 40 விழுக்காடு அளவில் மட்டுமே இருப்பதால், அது அதிக உணவை உட்கொள்கிறது. ஒரு நாளைக்கு 140 லிருந்து 270 கிலோ வரை சாப்பிடுகிறது! ஆசிய யானைகள் 2.80 மீட்டர் உயரமும், ஆப்பிரிக்க யானைகள் 3.20 மீட்டர் உயரமும் வளருமாம்!
காதுகள், தும்பிக்கை, தந்தம் ஆகியவை மற்ற விலங்குகளிலிருந்து மாறுபடுவதால், சிறப்புப் பெறுகின்றன. முறம் போன்ற காதுகள்! 40,000 தசைகளாலான நீண்ட துதிக்கை! தந்தம் என்பதற்குப் ‘பல்’ என்பதே பொருளாம். 3 மீ நீளமும் 90 கிலோ எடையும் வரை இருக்குமாம் தந்தங்கள்! ஆசிய யானைகளில் ஆண் யானைகளில் மட்டுமே தந்தம் வளர, ஆப்பிரிக்க யானைகளில் பெண் யானைகளிலும் தந்தங்கள் வளர்வதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்தத் தந்தங்களே அவைகளுக்கு எமனாகவும் அமைந்து விடுகின்றன!
மனிதன் யானைகளின் வாழ்விடமான வனங்களை அழிப்பதாலும், அவற்றின் பாரம்பரிய வழித்தடங்களில் தடங்கல்களை ஏற்படுத்துவதாலுமே பெரும்பாலும் யானைகள் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
மனிதர்களின் தற்காப்பும், தப்பிப்பும்: யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், அவ்விடங்களுக்குச் செல்வோர் சற்றே நின்று, நன்றாக அவ்விடத்து வாசனையை முகர்ந்தால் அவற்றின் சிறுநீர் நாற்றத்தைக் கொண்டே அவற்றின் இருப்பிடத்தை அறியலாம். சுமார் 50 மீட்டருக்கு அது பரவியிருக்குமாம்!நிதானமும், பொறுமையுமே நமக்குத் தேவை!
சரி! எதிர்பாராமல் யானை எதிரே வந்து விட்டால், வேகமாக ஓடி, மரத்திலோ அல்லது யானையின் பார்வை படாத உயரமான இடத்திற்கோ சென்று விடுவது நல்லதாம்! ஏனெனில், யானையால் நம்மைப்போல் அன்னாந்து வானத்தையெல்லாம் பார்க்க முடியாதாம்!
அடுத்து காற்றடிக்கும் திசைக்கு எதிர்த்திசையில் ஓடி, நம் வாசனையை யானை முகர முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்! யானைக்கு வாசனையை உணர்கின்ற திறன் அதிகம் என்பதால், வாசனையைக் கொண்டே நம் இருப்பிடத்தை அது எளிதாக அறிந்து விடுமாம்! நம் வாசம் படிந்த சட்டை, துண்டு, பை போன்றவற்றை எதிர்திசையில் வீசி விட்டு ஓடுவது நன்மை பயக்குமாம்! மேலும், அதன் பிளிறல் சத்தத்திற்குப் பயப்படாமல் நாம் தப்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமாம்!