'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை'- இது தெரியுமா?

Iluppai Tree
Iluppai Tree

ஓரறிவு உடைய மரங்கள் ஆறறிவு உடைய மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. அவ்வகையில் தற்போது அழிந்து வரும் மர இனங்களில் ஒன்றான இலுப்பை மரத்தின் அற்புதங்களை எடுத்துக் கூறுகிறது இந்தப் பதிவு.

மனிதர்களாகிய நாம் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மரங்களுக்குத் தான். 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்ற வாசகத்தை நாம் பள்ளிப்பருவத்தில் இருந்தே கேட்டிருக்கிறோம் அல்லவா! மனிதர்கள் இயற்கைக்கு என்ன தான் தீங்கிழைத்தாலும் வான்மழையை புவிக்கு கொண்டு வரும் அளவிற்கு சக்தி கொண்ட அற்புத படைப்பு தான் மரங்கள்.

மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் ஏதோ ஒரு பயன்பாட்டிற்கு நிச்சயமாக உதவும். தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட, அழிந்து வரும் இலுப்பை மரங்களின் அனைத்துப் பாகங்களும் நம் மனித இனத்திற்கு உதவக் கூடியவை தான்.

1950-களில் சுமார் 30,000-க்கும் மேலாக இருந்த இலுப்பை மரங்களின் எண்ணிக்கை, 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,000 ஆக குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. நமது பாரம்பரிய மரங்கள் அழிந்து வருவது மனித குலத்திற்கு பேராபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இலுப்பை மரத்தில் காய்கள் பழுக்கத் தொடங்கிய பிறகு வண்டுகள், பூச்சிகள் மற்றும் வௌவால்கள் இப்பழத்தை உண்ணத் தேடி வரும். ஆகையால் இம்மரங்களை விவசாய நிலத்தின் வரப்போரங்களில் நட்டு வளர்த்தால், பயிர்களைத் தாக்க வரும் பூச்சிகள் இலுப்பைப் பழத்தை உண்ணத் திசைமாறிச் சென்று விடும். இம்மரம் சப்போட்டா குடும்ப வகையைச் சார்ந்ததால், இதன் இலை, காய் மற்றும் கனிகள் சப்போட்டாவை ஒத்திருக்கும்.

இலுப்பை மரம் வெப்ப மண்டல தாவர வகையைச் சேர்ந்ததால், வறண்ட நிலங்களில் கூட நன்றாக வளரும் தன்மையுடையது. மேலும், வானில் மேகக் கூட்டங்களை வரச்செய்து புவிக்கு மழையைப் பிரசாதமாக அளிக்கும் திறன் கொண்டவை. ஆகையால், இலுப்பை மரங்களின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்திற்கு தேவை. 60 அடிகளுக்கும் மேல் வளரும் இம்மரங்கள் மிகச் சாதாரணமாக 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழும்.

'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழி இலுப்பை மரத்தின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் இருந்து 200 முதல் 300 கிலோ பூவும், சுமார் 200 கிலோ விதையும் கிடைக்கும். 200 கிலோ இலுப்பைப் பூவிலிருந்து 140 கிலோ வரை சர்க்கரையும், 60 கிலோ வரை எரிசாராயத்தையும் பிரித்தெடுக்க முடியும். ஒரு கிலோ விதையிலிருந்து 300மி.கி. எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். முன்பெல்லாம் விளக்கேற்றவும், சமையலுக்கும் இலுப்பை எண்ணெய் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பொன்வண்டு - கொடுக்காப்புளி மரம்; என்ன கனெக்ட்?
Iluppai Tree

இம்மரத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. மேலும், இலுப்பைப் பூ மற்றும் பழத்தின் சதைப்பகுதியை நொதிக்க வைத்து பழந்தமிழர்கள் சோமபானம் தயாரித்தனர். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அம்சங்கள் நிறைந்த இலுப்பை மரம் மட்டுமின்றி பல பாரம்பரிய மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. மரங்களைப் பாதுகாப்பது நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் வரம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போதே மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மரங்களின்றி வருங்காலம் இருந்தால் அதன் விளைவு கொடுமையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com