பூமி உருண்டையானது என்பது நிரூபிக்கப்படுவதற்கு முன்பு அனைவருமே பூமி தட்டையானது என்றுதான் நினைத்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்தது போலவே பூமி உண்மையிலேயே தட்டையாக இருந்தால்? இது நமது கற்பனைக்கு சவால் விடும் வகையில் இருந்தாலும், ஒருவேளை பூமி தட்டையாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
பூமி தட்டையாக இருந்தால் முதலில் நாம் சிந்திக்க வேண்டியது அதன் புவியீர்ப்பு விசையைப் பற்றிதான். பூமி உருண்டையாக இருந்தால், ஈர்ப்பு விசையானது எல்லா இடங்களுக்கும் சரிசமமாக இருக்கும். இதுவே, தட்டையான பூமியில் ஈர்ப்புவிசை எப்படி இருக்கும் என நாம் துல்லியமாக கணிக்க முடியாது. அதனால் பூமியின் இயக்கவியல் முற்றிலுமாக மாறுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
ஒரு தட்டையான பூமியில் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பெருங்கடல்கள் போன்ற புவியியல் அம்சங்கள் அனைத்துமே வேறு விதமாக இருக்கும். வளைவுகளே இல்லாத நிலப்பரப்புகளில் நீரின் ஓட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். மேலும் வானிலை மாற்றங்களில் பூமியில் உள்ள வளைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு தட்டையான பூமியில் காற்றின் சுழற்சி சீர்குலைந்து, கணிக்க முடியாத மோசமான வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதனால், பூமி கடுமையான வானிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஜிபிஎஸ் அமைப்பு சிறப்பாக செயல்பட பூமியின் உருண்டையான வடிவம் மிகவும் முக்கியம். ஒரு தட்டையான பூமியில் இப்போது உள்ள ஜிபிஎஸ் முறைகள் சரியாக வேலை செய்யாது. இதற்கு ஏற்றவாறான தொழில்நுட்பத்தை கண்டறிந்து, பல விஷயங்களில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டி இருக்கும்.
மேலும், தட்டையான உலகத்தில் நாம் தற்போது கொண்டிருக்கும் நம்பிக்கைகள் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். விண்வெளி ஆய்வு மற்றும் இயற்கை உலகம் பற்றிய புரிதல் போன்றவற்றின் அடிப்படைகள் அனைத்துமே மாறுபட்டதாக இருக்கும். இது வரலாற்றுக் கதைகளை மறு வடிவமைத்து, உலகத்தின் விதிமுறைகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நல்லவேளை பூமி தட்டையானதாக இல்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால், உயிர்களே தோன்றாத நிலை கூட ஏற்பட்டிருக்கலாம். அப்படியே இருந்தாலும் புவியீர்ப்பு விசை, வானிலை மாற்றங்கள் காரணமாக, உயிரினங்களின் தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டதாக இருந்திருக்கும். மனிதர்களே கூட இல்லாமல் இருக்கலாம். தட்டையான உலகத்தை நாம் கற்பனை செய்து பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதில் இருக்கும் ஆபத்துக்கள் ஏராளம்.