
காடுகளும் அதில் வாழும் உயிரினங்களும் சுற்றுச் சுழலைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கியதன் காரணமாக பலவிதமான சுற்றுச்சூழல் சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம். மரங்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
ஜப்பானைச் சோ்ந்த யோகோஹாமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் “அகிரா மியாவாக்கி” என்பவர் கண்டுபிடித்த ஒரு காடு வளர்ப்பு முறையே மியாவாக்கி காடுகள் (Miyawaki Forests) என்று அழைக்கப்படுகின்றன. இம்முறையைக் கண்டுபிடித்த அகிரா மியாவாக்கியின் பெயராலேயே இந்த காடு வளர்ப்பு முறை “மியாவாக்கி” என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இடைவெளி இல்லாத அடா்காடு என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த காடு வளர்ப்பு முறை. தமிழில் “குறுங்காடு” என்றும் இதனை அழைக்கலாம்.
மியாவாக்கி முறையில் குறைவான இடப்பரப்பில் குறைந்த கால அளவில் அதிக அளவில் அடர்த்தியான காடுகளை உருவாக்கி விடமுடியும் என்பதே இதன் தனித்துவமாகும். சாதாரணமாக ஒரு காடு உருவாவதற்கு இருநூறு முதல் முன்னூறு ஆண்டுகள் வரை ஆகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை பதினைந்து முதல் முப்பது வருட கால அளவில் உருவாக்கிவிட முடியும்.
குறைவான நிலப்பரப்பில் ஆழமான குழியை தோண்டி அதற்குள் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமாகவும் அதிக எண்ணிக்கையிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மியாவாக்கி காடு வளர்ப்பின் சிறப்பு என்னவெனில் குறைவான நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் நட்டு வளர்க்கப்படுகின்றன. சிறிய நிலப்பரப்புகளில் நகரத்தின் பல இடங்களில் ஆங்காங்கே இத்தகைய அடர் காடுகள் வளர்க்கப்படுவதால் பூமியின் வெப்பமானது வெகுவாகக் குறைகிறது.
காற்றில் போதிய அளவு ஈரப்பதம் நிலவுகிறது. பறவைகளும் பூச்சிகளும் இயற்கையாக வாழும் சூழ்நிலை உருவாகிறது. மரங்களிலிருந்து வெளியாகும் ஆக்சிஜன் மூலமாக காற்றின் மாசு குறைந்து நல்ல சுத்தமான காற்று நமக்குக்கிடைக்கிறது.
தற்காலத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை பிரபலமாகி வருகிறது. சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், வானகரம், முகலிவாக்கம், வளசரவாக்கம் முதலான பகுதிகளில் மாநகராட்சி மியாவாக்கி முறையில் மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 23000 சதுரஅடியில் இருபது லட்ச ரூபாய் செலவில் மியாவாக்கி வனங்களை உருவாக்கியுள்ளது.
இந்த மியாவாக்கி வனத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, வேம்பு, தேக்கு, அகத்தி முதலான 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் சென்னை மட்டுமின்றி ஐதராபாத், பெங்களுரு முதலான நகரங்களில் மியாவாக்கிக் காடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. குஜராத்தில் உலகின் மிகப்பெரிய மியாவாக்கிக் காடு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் நான்காயிரம் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து முதலான நாடுகளில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மியாவாக்கி முறையில் வளர்க்கப்படும் மரங்கள் சாதாரணமாக வளரும் மரங்களைவிட பத்து மடங்கு அதிக அடர்த்தியுடன் வளர்ந்து நல்ல பலன்களைத் தருகின்றன. இவை கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்சிஜனை வெளிவிடுவதால் சுற்றுச் சூழல் மாசு வெகுவாகக் குறைந்து காற்று தூய்மையாகிறது.
மேலும் பறவைகள் பூச்சிகளுக்கு இவை வாழிடமாக விளங்குவதும் ஒரு கூடுதல் நன்மையாகும். மியாவாக்கிக் காடுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக்கி சுகாதாரமாக வாழும் சூழலை உருவாக்கி நமக்கு பெரும் நன்மை விளைவிக்கின்றன.