
இன்று எல்லோருக்குமே ஒரு விழிப்புணர்வு வந்துள்ளது. மாடி தோட்டம் அமைப்பது, வீட்டில் சிறிதளவு இடம் இருந்தாலும் அந்த இடத்தில் ஏதாவது ஒரு சிறுசெடியை வளர்ப்பது, முடிந்த அளவு வீட்டைச் சுற்றிலும் முருங்கை மரத்தை யாவது வளர்ப்பது என்ற அளவிற்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் எல்லோர் வீட்டிலும் ஒரு அழகுக்கு அழகு சேர்க்கும் பொருளாகவாவது செடி வளர்ப்புமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால் அக்கம் பக்கத்திலும் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை எப்படி சமாளிப்பது? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? அக்கம் பக்கத்தாரை அனுசரிப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.
முதலில் தோட்டத்தில் இருக்கும் குப்பைகளை எல்லாம் ஒன்றாக பெருக்கி ஒரு குழியில் இட்டு புதைத்துவிட வேண்டும். இதனால் 100 நாட்கள் கிடைத்து நல்ல இயற்கை உரம் கிடைக்கிறது. இப்படி புதைப்பதால் மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் புகையோ, கரியோ சென்று படியாமல் இருப்பதற்கு இந்த முறையே சிறந்தது.
மேலும் சிறிய இலைகளை உடைய நெல்லிக்காய் போன்ற மரங்களை நம் வீட்டுத்தோட்டத்திற்கு உள்ளாகவே இலைத்தழைகள் உதிர்ந்து கொட்டும் அளவிற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து வளர்ப்பது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.
இரண்டு வீட்டிற்கும் இடையே உள்ள இடத்தில் நம் காம்பவுண்ட் சுவருக்கு உள்ளாகவே மரங்களை வளர்த்தாலும், கிளைகள் படர்ந்து அடுத்த வீட்டுக்கு செல்வதை தடுக்க முடியாது. அதற்கு அந்தப் பக்கம் செல்லும் கிளைகளை வளரும்போதே வெட்டிக்கொண்டு வந்தால் நம் வீட்டு பக்கம் சாய்த்து வளரும். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இலைகள் கொட்டாது. இதனால் மனக்கசப்பு உண்டாகாது.
மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் மரங்களில் இருந்து விழும் மாங்காய், தேங்காய் போன்றவற்றை அவர்கள் வீட்டிற்கு மதில் சுவர் வழியாக எடுத்துப்போட்டுவிட்டால் உறவுக்குள் விரிசல் வராது.
அதேபோல் நம் வீட்டுப்பொருட்களை அவர்களிடம் இனாமாகக் கொடுத்து, அவர்களின் பொருட்களை நாம் விலைக்கு வாங்கிக் கொண்டால் பிரச்னை எழாது.
அவர்கள் கேட்கும் பொருட்களை எல்லாம் அவர்களாகவே வந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினால் சந்தோஷம் அடைவார்கள். நமக்கும் அதை பறித்துக்கொடுப்பதற்கான நேரமும் குறையும். செடிகளிலே இருந்து காய்ந்துபோகும் கீரை வகைகளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டால் அவர்களுக்கும் நன்மை கிடைக்கும். நம் பொருள் வீணாகாமல் இருப்பது நமக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
அளவுக்கு மீறி செடி, கொடியிலே மரங்களில் பழுக்கும் காய்கறிகளை படிக்கும் இளைஞர்கள் விற்றுத் தருவதாக கூறினால், அந்தக் காசை அவர்கள் படிப்பிற்கு பயன்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ள சொல்லலாம்.
தென்னை மட்டைகளிலிருந்து கிடைக்கும் ஓலைகளை கிழித்து துடைப்பம் செய்ய பயன்படுத்துபவர்களுக்கு உதவும்படி அவர்களின் செல் நம்பரை வாங்கி வைத்து உதவி செய்யலாம். இதனால் நமக்கும் குப்பை சேர்வது குறையும். அவர்களுக்கும் கொஞ்சம் காசு கையில் கிடைக்கும்படி நல்வழியில் பயன்படுத்திக்கொள்வார்கள்.
அதேபோல் நம் வீட்டில் வளரும் காய்க்கும் காய்கறி, கனிகளை எப்பொழுதும் பறித்த உடன் முதன்முறையாக அக்கம் பக்கத்தார் வீட்டிற்கும் கொடுத்து வந்தால் குறைப்பட்டுக்கொள்ள மாட்டார்கள். இதனால் கொடுக்கல் வாங்கல் அதிகமாகும். அப்பொழுது உறவு மேம்படும்.
ஆனால் சில நேரங்களில் ஒரு சில செடிகளில் முட்கள் இருக்கும். அவற்றை புதைக்க முடியாது அப்பொழுது ஆழக்குழி வெட்டி எரித்து விடவேண்டும். அப்படி எரியும் பொழுது அதிகமான வெப்பம் வெளியில் வராது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தொந்தரவு ஏற்படாது. அதுபோல் குழியை அமைக்க வேண்டியதும் அவசியம்.
அந்த சாம்பலை குழியில் மட்கிய நிலையில் கிடைக்கும் எருவுடன் சேர்த்து, சாண எருவுடன் கலந்து வீட்டை சுற்றி உள்ள அனைத்து தாவர, செடி, கொடி மரங்களுக்கு இட்டால் போதுமான அளவு போஷாக்கான இயற்கை உரம் அவைகளுக்கு கிடைத்து விடும். இவற்றால் நன்றாக காய்கனிகளை பறிக்க முடியும்.
இப்படி நம் வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளில் இருந்து தோட்டக்கழிவுகளை சேர்த்து பயன்படுத்தி மட்கவைத்து உரமாக்கி செடி, கொடிகளை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். இதனால் கோடையில் நம் வீட்டிற்கு மட்டுமல்லாது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் நல்ல குளிர்ச்சியான காற்று கிடைக்கும். வெப்பம் தணியும் என்பது உறுதி. இதனால் அக்கம் பக்கம் உறவுகளும் மேம்படும்.