
பூமியின் காலநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய காரணியாக கவனிக்கப்படாத ஒரு விஷயம் உள்ளது. அதுதான் நீராவி. நீராவி ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் மூலமாகும். இது நமது கிரகத்தின் வானிலையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இத்தகைய நீராவிகள் பெரும்பாலும் மனிதர்களின் செயல்களாலேயே தூண்டப்படுவதால் உலக வெப்பமயமாதலுக்கு இதுவே காரணமாக அமைகிறது.
பூமியின் வளிமண்டலம் என்பது வாயுக்களின் சமநிலையால் ஆனது. இதில் நீராவி வளிமண்டலத்தின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. உலகின் வெப்பநிலை அதிகரிக்கும்போது பெருங்கடல் வெப்பமாகிறது. இதனால் மேலும் நீராவி வளிமண்டலத்தில் சேர்ந்து காலநிலை மாற்றத்தில் பெரும் பங்காற்றுகிறது.
நீராவியால் ஏற்படும் விளைவு: நீராவியும் ஒரு கிரீன்ஹவுஸ் வாயுதான். இது வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் உலகின் வெப்பம் கணிசமாக உயர்கிறது. இதனால் வெப்பமயமாதல் தீவிரப்படுத்தப்பட்டு, தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. வளிமண்டலத்தில் உயர்ந்த நீராவியால் சில இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படலாம். நீராவி அதிக ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்வதால் அதிதீவிர மழை, கடுமையான புயல், திடீர் வெள்ளம் மற்றும் சூறாவளி போன்றவை ஏற்பட்டு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது.
மேலும், உயர்ந்த நீராவியால் துருவப் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து கடலோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம். இதனால் கடல் அலைகளில் அதிக தாக்கங்கள் ஏற்பட்டு கடுமையான கடலோர வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் தீவிர மழைக்கு எரிபொருளாக இருப்பது மட்டுமின்றி, நீண்டகால வறட்சிக்கும் அதிக வெப்பத்திற்கும் பங்களிக்கிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டு மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை சரி செய்து, கிரீன்ஹவுஸ் வாயுக்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக, அதிகரிக்கும் நீராவி மற்றும் மோசமான வானிலை நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.