இந்தியாவில் தென்னை விவசாயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, அதிக அளவிலான தேங்காயை உற்பத்தி செய்வதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பதாக தென்னை வளர்ச்சி வாரிய சென்னை மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், தென்னை வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனர் கூறும்போது, ‘‘இந்தியாவில் தென்னை உற்பத்தி முக்கிய வர்த்தகமாக மாறி இருக்கிறது. ஏற்றுமதியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கஜா புயலின்பொழுது தென்னை மரங்கள் சாய்ந்து, தேங்காய் உற்பத்தி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தற்போது சிறுகச் சிறுக அதிலிருந்து மீண்டு டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தேங்காய் உற்பத்தியில் முக்கிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது.
உலகில் அதிகம் தேங்காய் பயிரிடப்படும் நாடாக இந்தோனேஷியா உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் 16 நாடுகளில் தென்னை மரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்குகிறது. முன்னிலையில் உள்ள நாடுகளை விட, குறைவான அளவில் பயிரிட்டாலும் அதிக அளவிலான உற்பத்தி இந்தியாவில் நிலவுவதால், இந்தியா முதலிடத்தைப் பெற்று இருக்கிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 57,000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வரும் புகார்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.
மேலும், தென்னை பொருட்களைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கம் செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனையும், பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் முக்கிய விளைபொருளாகவும், வர்த்தகப் பொருளாகவும் தென்னை மாறி இருக்கிறது” என்று தெரிவித்தார்.