காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வுப் பணியை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா மேற்கொண்டு வருவதாக தகவல்.
தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் இயற்கை சூழல் முற்றிலும் மாற்றம் கண்டு இருக்கிறது. இதனால் இந்திய நிலப்பரப்பில் இதுவரை கணக்கிட்டு பயன்படுத்தப்பட்ட வந்த அனைத்து வகை கால அட்டவணைகளும் மாறுபட்டு இருக்கின்றன. மேலும் தற்போது பெய்த மழை மற்றும் புயல் பாதிப்புகள் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்து சென்றிருக்கின்றன. இந்த நிலையில் மாற்றம் கண்டு வரும் காலநிலை குறித்து அறிந்து கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்திய அரசு தற்போது காலநிலை மாற்றம் குறித்தான ஆராய்ச்சியை தீவிர படுத்திருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பது, ஒட்டுமொத்த உலக நாடுகளும் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பை சந்திக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் உலகில் பல்வேறு நாடுகளிடையே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் பூமியில் பல்வேறு நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் தரவுகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன.
மேலும் புதிய தகவல்கள், பிறநாடு கண்டுபிடித்த தனிப்பட்ட காலநிலை அளவுகள், வரையறைகள், சிறப்பு தகவல்கள் ஆகியவையும் இதன் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்த உலக நாடுகள் ஒருங்கிணைந்த அட்டவணையை தயாரிப்பது, புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, காற்று வீசும் திசை குறித்த புதிய ஆய்வை முன்னெடுப்பது, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகளை கண்டறிவது குறித்து புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை ஸ்டுடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை காலநிலை மாற்றம் குறித்த அட்டவணைகள் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை அறியப்படும்.
இது மட்டுமில்லாமல் காலநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தொழிற்சாலைகளை பசுமையானதாக மாற்ற செய்ய வேண்டிய முயற்சிகள், காலாவதியான செல்போன்களிலிருந்து லித்தியம் மற்றும் வெள்ளி பிரித்தெடுக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.